×

கொரோனா படுத்தும் பாடு: பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு அரசு வருவாய்க்கு வைத்தது வேட்டு

சென்னை: சர்வதேச சந்தையில் பிராண்ட் கச்சா எண்ணெய் பேரல் 20 டாலருக்கு கீழ் வந்து விட்டது. ஆனால், ஏறக்குறைய 44 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  காரணம் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் அரசுக்கு வரி வருவாய் குறைந்து விடும் என்பதுதான். மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயை முக்கிய வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கின்றன. பெட்ரோலியத்துறை, அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்து. கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு கிடைத்த கலால் வரியில், சுமார் 92 சதவீதம் பெட்ரோலிய பொருட்கள் மூலமாகத்தான் கிடைத்தது.  இதுபோல், மத்திய அரசின் மொத்த வருவாயில் பெட்ரோலிய பொருட்கள் மூலமாக கிடைப்பது 20 சதவீதம் என, பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வுப் பிரிவு கூறுகிறது.

 கலால் வரி, விற்பனை வரி, கச்சா எண்ணெய் மீதான வரி, ஜிஎஸ்டி, நுழைவு வரி என ஏகப்பட்ட வரிகள் அரசின் கஜானாவை நிரப்புகின்றன. இது தவிர, எண்ணெய் நிறுவனங்கள் வருமான வரி, டிவிடென்ட், பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றையும் அரசுக்கு வழங்குகின்றன.  பெட்ரோல் விலையை குறைக்காவிட்டாலும், விற்பனை கடுமையாக சரிந்ததால் மேற்கண்ட வருவாய் குறைந்து அரசுக்கு வேட்டு வைத்து விட்டது. கடந்த மார்ச் மாதம் பெட்ரோலிய பொருட்களின் தேவை சராசரியாக 17.8 சதவீதம் குறைந்து விட்டது. பெட்ரோல் பயன்பாடு 16.4 சதவீதம், டீசல் பயன்பாடு 24.2 சதவீதம், ஏடிஎப் எனப்படும் விமான பெட்ரோல் 32.4 சதவீதம் குறைந்து விட்டது.

 இந்த மாதம் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு 60 முதல் 70 சதவீதம் சரிந்து விட்டது. ஊரடங்கு முடிந்தாலும் கூட, பழைய நிலைக்கு விற்பனை உடனடியாக உயர்வதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், நிறுவனங்கள் முடக்கம், வேலை இழப்பு, பணத்தட்டுப்பாடு ஆகியவை மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  எனவேதான், மத்திய அரசுக்கு கலால் வரி வருவாயும், மாநில அரசுகளுக்கு வாட் மற்றும் பிற வரி வருவாய்களும் தடைபட்டு விட்டது.
 உதாரணமாக, நடப்பு நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவை சுமார் 30 சதவீதம் குறைந்தாலும், மத்திய அரசுக்கு கலால் வரி வருவாய் நடப்பு ஆண்டில் 1.95 லட்சம் கோடியாக குறைந்து விடும். பட்ஜெட்டில் இது ₹2.67 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய்க்கு வேட்டு வைத்து விட்டது. இதனால், நிதி பற்றாக்குறையில் திண்டாடும் அரசுகள், ஊழியர்களின் சம்பளத்தில் கூட கை வைக்க தொடங்கி விட்டன.  இதை ஈடுகட்ட, கடந்த மார்ச் மாதம் பெட்ரோல், டீசல் கலால் வரியை லிட்டருக்கு தலா₹3 உயர்த்தியதுபோல் மீண்டும் உயர்த்த வேண்டி வரும், அதோடு, நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய பிற திட்டங்களுக்கான நிதிகளை குறைத்து, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டிய சூழ்நிலையும் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் பெரும்பகுதி வரிதான்
மத்திய அரசு பெட்ரோலுக்கு கலால் வரியாக 22.98, டீசலுக்கு 18.83 வசூலிக்கிறது. மாநிலங்கள் தனியாக வரி விதிக்கின்றன. வரி வசூல் இழப்பை தடுக்க கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த மாதம் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தின. தமிழக அரசு பெட்ரோலுக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் வரி விதிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 860 கோடி
மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.98 ரூபாய், டீசலுக்கு 18.83 ரூபாய் வசூலிக்கிறது. பிபிஏசி புள்ளி விவரத்தின்படி கடந்த 2019 ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தினந்தோறும் சராசரியாக 15.3 கோடி லிட்டர் பெட்ரோல், 26.99 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் சராசரியாக மத்திய அரசுக்கு இதன்மூலம் கிடைத்த வரி நாள் ஒன்றுக்கு 860 கோடி.

பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு?
மத்திய அரசுக்கு வருவாய் (மதிப்பு கோடி ரூபாயில்)
வரி / டிவிடெண்ட்    2014-15    2015-16    2016-17    2017-18    2018-19    2019-20
(9 மாதங்கள்)
கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மூலம் வரி    1,26,025    2,09,354    2,73,225    2,76,168    2,79,847    1,94,055
டிவிடெண்ட், வருமான வரி    46,040    44,943    61,950    59,994    68,194    26,685
மொத்தம்    1,72,065    2,54,297    3,35,175    3,36,162    3,48,041    2,20,740
மாநில அரசுகளுக்கு வருவாய்
கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மூலம் வரி    1,60,526    1,60,114    1,89,587    2,06,601    2,27,396    1,59,144
டிவிடெண்ட்    28    95    183    262    195    43
மொத்தம்    1,60,554    1,60,209    1,89,770    2,06,863    2,27,591    1,59,187
மத்திய மற்றும் மாநில
வருவாய் மொத்தம்    3,32,619    4,14,506    5,24,945    5,43,025    5,75,632    3,79,927

Tags : Corona , Corona, petrol, diesel
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...