×

பழையகாயல் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

தூத்துக்குடி :  பழையகாயல் அருகே கடற்கரையில் அரியவகை டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளி கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மரைன் போலீசார் மற்றும் வனத்துறையினர், மன்னார் வளைகுடா தேசிய உயிரின உயிர்க்கோள காப்பக அதிகாரிகள் வந்து இறந்து கிடந்த டால்பினை மீட்டு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இறந்த டால்பின் சுமார் 500 முதல் 550 கிலோ எடை கொண்டதாகவும், உடல் மேல்பகுதி கறுப்பு நிறமாகவும் வயிறு பகுதி வெள்ளை நிறமாகவும் காணப்பட்டது. விசாரணையில் அந்த டால்பின் கப்பல் மோதியதில் உயிரிழந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் அதன் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. மீன் இனங்களில் டால்பின் அரியவகை உயிரினமாகும். பாலூட்டி வகையை சேர்ந்த டால்பின்கள் ஆழ்கடலில் வாழக்கூடியது. சில நேரங்களில் கடற்கரை மேற்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இதை மீனவர்கள் பிடிப்பதில்லை.

இந்நிலையில் தற்போது புல்லாவெளி கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டால்பினை உடற்கூறுஆய்வு செய்து அதன் பின்னர் புதைக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : lake ,thoothukudi ,shore , thoothukudi,Dead dolphin,shore
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!