×

தமிழகத்தில் மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா? படிப்படியாக தளர்த்த அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு நேற்றுடன் 33 நாட்கள் முடிந்த நிலையில், வருகிற மே 3ம் தேதியுடன் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  மார்ச் 25ம் தேதி அதிகாலை 6 மணியில் இருந்து மே 3ம் தேதி வரை (40 நாட்கள்) ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது. தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை. விமானம், ரயில், பஸ், டாக்சி, ஆட்டோ, பைக், ஸ்கூட்டர் என எதுவும் ஓடவில்லை.

பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கிறார்கள். கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் தினசரி உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு வேலைக்கு வந்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. கோயில்கள், தேவாலயம், மசூதிகள் மூடிக்கிடக்கிறது. வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

பொதுமக்களின் தற்போதைய கேள்வி, இந்த கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு எப்போது முடியும், எப்போது இயல்பு வாழ்க்கை திரும்பும், நாம் எப்போது வேலைக்கு செல்வோம் என்பதுதான். இதற்கான விடையை மத்திய-மாநில அரசுகள் தான் தெரிவிக்க வேண்டும். இந்த பரபரப்பான நிலையில் பிரதமர் மோடி இன்று (27ம் தேதி) அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச உள்ளார்.
  மே 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கை தளர்வு செய்ய வேண்டும். ஆட்டோ, கால்டாக்சி போன்ற போக்குவரத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம். பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளை குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கலாம். கடைகளை திறக்க அனுமதிக்கலாம். அதேநேரம் பெரிய மால்களை திறப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தாலே கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். காரணம், இதுவரை சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றதாலோ, கடைகளுக்கு சென்று வந்ததாலோ கொரோனா வைரஸ் நோய் ஒருவருக்கு வந்ததாக கூறப்படவில்லை. வீட்டில் கூட்டமாக இருந்ததால் அல்லது கொரோனா வந்த ஒருவருடன் நெருங்கி பழகியதால் மட்டுமே இந்நோய் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்படியே ஊரடங்கு என்ற பெயரில் அனைவரையும் வீட்டில் முடக்கி வைப்பது எந்த பயனும் அளிக்கப்போவதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

புதிய பணிகளை தொடங்காமல் பழைய பணிகளை முடிக்கலாம்
தமிழகம் முழுவதும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகளை தொடங்க அனுமதி அளிக்கலாம். சாலைகளில் தற்போது கூட்ட நெரிசல் இல்லை. இதனால் மேம்பால பணிகளை வேகமாக முடிக்க முடியும். சென்னையில் பல மேம்பாலங்கள் முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த பணிகளை முடிக்க முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, புதிய சாலை, புதிய மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் எதுவும் தொடங்காமல், தறபோது பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க மட்டுமே அனுமதிக்கலாம். அதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் பணிகளை தொடர அனுமதிக்கலாம்.

Tags : Tamil Nadu ,government , Tamil Nadu, Curfew, Government of Tamil Nadu, Corona, Public
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...