சேலம்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு பட்டுநூல் வருவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு உற்பத்தியாளர்களிடம் பல கோடி மதிப்பில் பட்டு வேஷ்டிகள் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் சேலம், விருதுநகர், திருச்சி, நாமக்கல், கோவை,ஈரோடு,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சர்ட் பீஸ் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக பட்டு வேஷ்டிக்கு தேவையான பட்டுநூல்,கர்நாடகாவில் இருந்து வராததால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் சௌராஷ்டிரா பட்டு ஜவுளி உற்பத்தியாளர், விற்பனையாளர் சங்க தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலத்தில் தான் 90 சதவீதம் பட்டு வேஷ்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 10 சதவீதம் தான் மற்ற பகுதிகளில் உற்பத்தியாகிறது. சேலத்தில் பொன்னாம்மாப்பேட்டை,அம்மாப்பேட்டை,நாமமலை அடிவாரம், சுந்தர்ராஜன் காலனி, தேவாங்கர் காலனி, அல்லிக்குட்டை, ட்டைகோயில்,சிங்கமெத்தை உள்பட பல பகுதிகளில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த பகுதிகளில் பட்டுநூலில் இருந்து பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சர்ட் பீஸ் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேஷ்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம் உள்பட பல பகுதிகளுக்கும்,இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா,டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கும்,சிங்கப்பூர், இலங்கை,மலேசியா, அமெரிக்கா,லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பட்டு வேஷ்டி உற்பத்தியில் நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் இதன் சார்பு தொழிலான பட்டுநூல் டூஸ்டிங் செய்வது,பாவு உற்பத்தி செய்தல், ஜரிகை உற்பத்தி என லட்சக்கணக்கானோர் உள்ளனர். போக்குவரத்து இல்லாததால் கர்நாடகாவில் இருந்து வழக்கமாக வரவேண்டிய பட்டுநூல் வரவில்லை. ஊரடங்கு அமலுக்கு பிறகு பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஒருவாரம் உற்பத்தியில் ஈடுபட்டனர்.அதன்பின்,பட்டு நூல் கிடைக்காததால் அனைத்து பட்டு கைத்தறி நெசவாளர்களும் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக 50 ஆயிரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த 25 நாட்களுக்கு வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இதனை சார்ந்துள்ள சார்பு தொழிலாளர்கள் வேலைகளும் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.போக்குவரத்து இல்லாததாலும், கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும் பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம்,சர்ட் பீஸ் விற்பனை நூறு சதவீதம் நின்றுவிட்டது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்பில் பட்டு வேஷ்டிகள் தேக்கமடைந்துள்ளன. விற்பனை இல்லாததால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஜெயபால் கூறினார்.
ஏற்காட்டில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் அவசியம்
தமிழகத்தின் பட்டுநூலின் தேவையை 90 சதவீதம் கர்நாடகாதான்,பூர்த்தி செய்கிறது. அங்கிருந்து பட்டுநூல் கொண்டு வர போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. நமது மாவட்டத்தில் குளிர் பிரதேசமாக ஏற்காடு உள்ளது. இங்கு ஒரு ஆண்டில் எட்டு மாதம் குளிர் நிலவுகிறது. எனவே ஏற்காட்டில் பட்டுப்புழு மையம் அமைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஏற்காட்டில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் அமைந்தால் போக்குவரத்து செலவு தவிர்க்கலாம்.பட்டுநூலுக்கு அண்டை மாநிலங்களை நம்பி இருக்க தேவையில்லை.இதன் மூலம் சேலத்தில் பட்டுநூல் டூஸ்டிங் செய்வது உள்பட பல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது தொடரும் கோரிக்கை.
வறுமையை ஓரளவு
தீர்க்கும் அட்வான்ஸ்
கர்நாடகாவில் இருந்து பட்டுநூல் வராததால் கைத்தறி நெசவாளர்களுக்கு சரிவர பட்டு நூல் கொடுக்க முடியவில்லை. அவர்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால்,குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் வறுமையை போக்க பட்டு வேஷ்டி உற்பத்தியாளர்கள்,நெசவாளர்களுக்கு வாரத்திற்கு 1000 முதல் 2 ஆயிரம் அட்வான்ஸ் தொகை வழங்கி வருகின்றனர்.இதன் மூலம் அவர்களின் வறுமை சற்று குறைந்துள்ளது என்கின்றனர் நிர்வாகிகள்.
எலி, பூச்சிகளால் வீணாகும் பட்டு
ஊரடங்கு அமலால் கடந்த ஒரு மாதமாக பட்டுவேஷ்டிகள் அங்கவஸ்திரம், சர்ட் பீஸ் தேக்கமடைந்துள்ளது. இவற்றை மரப்பெட்டியில் வைத்து பராமரித்து வருகின்றனர். ஒரு மாதமாக விற்பனை இல்லாததால் எலி,பூச்சிகள் வேஷ்டிகளை கடித்து வீணடித்து வருகின்றன. இதே போல் வேஷ்டியில் கொசு அமர்ந்தால் கூட,அழுக்குபடிந்து விடுகிறது. எலி,பூச்சி,கொசு தொல்ைலயால் உற்பத்தியாளர்கள் பல லட்சம் நஷ்டமடைந்துள்ளனர் என்பதும் நெசவாளர்களின் குமுறல்.
