×

கொரோனா ஊரடங்கால் முடங்கிய தொழிலாளர்கள்; செடியிலேயே காய்ந்து வீணாகும் காபி பழங்கள்: ஏற்காடு விவசாயிகள் வேதனை

சேலம்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்காட்டில் காபிக்கொட்டைகள் செடியிலேயே காய்ந்து வீணாகி  வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் கர்நாடகாவில் 75 சதவீதமும், கேரளாவில் 20 சதவீதமும், தமிழகத்தில் 5 சதவீதமும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் அதிகளவில் காபி பயிரிடப்படுகிறது. இங்கு அராபிகா காபி பயிர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரிலும், ரோபஸ்டா காபி பயிர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது. ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பரில் காபி உற்பத்தி தொடங்கி மார்ச், ஏப்ரலில் முடியும். அதேபோல் மீண்டும் ஏப்ரலில் தொடங்கி டிசம்பரில் சீசன் முடியும். கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் காபிச்செடியில் நல்லமுறையில் பூக்கள் பூத்தன. இவைகள் எதிர்பார்த்த அளவில் நல்ல உற்பத்தியை தந்துள்ளது.

காபிச்செடியில் பழுத்த காபிக்கொட்டையை பறிக்கும் நேரத்தில் கொரோனா வைரஸ் பரவிய காரணத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால் காபிக்கொட்டை பறிக்க கூலி தொழிலாளர்கள் இல்லாததால் செடியிலேயே காபிக்கொட்டை காய்ந்து வருவதாக காபி விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த காபி விவசாயிகள் கூறியதாவது: உலக அளவில் பிரேசில், வியட்நாம் நாடுகளில் காபி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்காட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி செடி பயிரிடப்பட்டுள்ளது. ஏற்காட்டில் கொட்டச்சேடு, செம்மநத்தம், நாகலூர், கீரைக்காடு உள்பட பல கிராமங்களில் காபி தோட்டங்கள் உள்ளன. கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் காபிச்செடியில் பூக்கள் பூத்தது. தற்போது அனைத்து செடிகளிலும் காபிக்கொட்டை நல்லமுறையில் காய்ப்பு பிடித்து பறிக்கும் நிலையில் உள்ளது.  

காபிக்கொட்டை பறிக்கும் நேரத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுவாக மார்ச், ஏப்ரக்குள் காபிக்கொட்டை பறித்துவிடவேண்டும். இந்த நேரத்தை விட்டுவிட்டால் மே மாதத்தில் அனைத்து செடிகளிலும் காபிக்கொட்டைகள் தானாக கீழே விழுந்துவிடும். பின்னர் ஜூன் மாதத்தில் புதியதாக பூ பூக்க தொடங்கும். கொரோனா வைரஸ் பீதிக்கு  முன்பு 50 சதவீத காபிக்கொட்டை மட்டுமே பறிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் மீதமுள்ள காபிக்கொட்டையை பறிக்க கூலி தொழிலாளர்கள் வராததால் செடியிலேயே காய்ந்து வருகிறது. இதன் காரணமாக நடப்பாண்டு 20 முதல் 25 சதவீத காபிக்கொட்டைகள் வீணாகி வருகிறது.

செடியிலேயே காபிக்கொட்டைகள் காய்ந்து வருவதால், காபி விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காபிக்கொட்டை பறிக்கும் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு ₹ 400 முதல் ₹ 500 சம்பாதித்து வந்தனர். தற்போது காபிக்கொட்டை பறிக்கும் தொழிலுக்கு யாரும் வராததால், அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு காபி விவசாயிகள் கூறினர்.

இறக்குமதியை தடை செய்ய வேண்டும்
காபிகொட்டையை பறித்து, அதை பதப்படுத்தி ஏலத்தில் விற்பனை செய்வோம். வழக்கமாக ஒரு கிலோ காபி கொட்டை ₹120 முதல் ₹140 என விற்பனை செய்வோம். கடந்த சில ஆண்டாக உள்ளூர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு காபிக்கொட்டை இறக்குமதி செய்யப்படுவதே இதற்கு காரணம்.  எனவே இதனை தவிர்க்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உள்ளூர் காபி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பது ஏற்காடு காபி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தானாக விழுந்து வீணாகும் மிளகு
ஏற்காட்டில் பல நூறு ஏக்கரில் காபி தோட்டங்களுக்கு மத்தியில் மிளகு ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமலை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் மிளகு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஏற்காட்டில் சாகுபடியாகும் மிளகு காரம் மிகுந்ததாக இருக்கும். இதனால் ஏற்காடு மிளகுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. காபி பயிரை போலவே மிளகு சீசனும்  ஆரம்பித்துள்ளது.

ஊரடங்கு அமலால் காபி கொட்டையை போலவே மிளகை பறிக்கவும் தொழிலாளர்கள் இல்லை. இதன் காரணமாக மிளகு காய்ந்து, செடியில் இருந்து தானாக கீழே விழுந்து வருகிறது. காபி கொட்டை கீழே விழுந்தால் பொறுக்கி எடுத்து  பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் மிளகுச்செடியில் இருந்து தானாக மிளகு கிழே விழுந்ததால், அதை பொறுக்க முடியாது. இதனால் மிளகு பயிரிட்டதிலும், பல லட்சம் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் விவசாயிகளின் குமுறல்.

Tags : Corona , Corona, workers, plants, coffee fruits
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...