×

கோவிட்-19க்கு எதிராக சிறந்த செயலிகள், இணையதளங்கள் உருவாக்குபவர்களுக்கு பரிசுகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: கோவிட்-19க்கு எதிராக சிறந்த செயலிகள், இணையதளங்கள் உருவாக்குபவர்களுக்கு தேசிய, மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:  பலவகையான பேரிடர்களையும் கணக்கில் கொண்டு, 25 துறைகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டறிதல், அந்தத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பணிகளைப் பிரித்தளித்தல், கோவிட்-19 க்கான சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள், முதல் நோயாளிகள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களை ஒருங்கிணைத்தல், நோயாளிகளின் சிகிச்சை மற்றும் அறிகுறிகளின் நிலை தொடர்பான தகவல்கள், மருத்துவர் நியமனம், மருத்துவமனை அனுமதி, ஒருங்கிணைந்த டோல் ப்ரீ எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறுத்தல், நிவாரண நிதிகளையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டுதல், கோவிட் பரிசோதனைகளை நடத்தி அதன் முடிவுகளை ஆன்லைனில் பெறுதல், வீட்டுக்கண்காணிப்பில் சிகிச்சைகளைத் தொடர்தல், நேரந்தவறாத சிகிச்சைகளுக்கான அலாரம், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு உணவளித்தல், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குதல், அரசுப் பணிகளை ஒருங்கிணைத்தல், அத்தியாவசியப் பணிகளுக்காக பயண அனுமதிகள், தனிநபர்கள் பயண அனுமதி கோருதல், சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விநியோகங்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு உதவுதல், ஆதரவற்றோர், திருநங்கை, திருநம்பி, மாற்றுத்திறனாளர்கள், எச்.ஐ.வி யினர், தங்கும் இடமற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உதவுதல் என்பவை போன்ற பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து, பேரிடர்க்காலத் துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க ஒரு அதிவிரைவுச் செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் செயல் இலக்கு.

ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கும், அந்தத் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கும் இந்த ஹேக்கத்தான் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கிறது. மத்திய அரசுத்துறையும் இந்நிகழ்வுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. வெற்றி பெறும் பங்கேற்பாளர்களின் சாதனைகள் அவர்களது கல்வி நிறுவனங்களின் மற்றும் தரவரிசை உயர்வதற்கும் துணையாக இருக்கும். சிறந்த செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குபவர்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படும். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும். தேசிய அளவில் வரும் ஏப்ரல் 27 முதல் மே 6 வரை ஹேக்கத்தான் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பதிவாளர் கருணாமூர்த்தி தங்களது வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்குகிறார். இது பற்றிய இன்னும் கூடுதல் தகவல்களை இதற்கான இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Web Developers ,Kovit-19 ,Anna University ,Best Processors ,Websites Developers for Prizes , Prizes,Best Processors,Websites Developers against Kovit-19,Anna University Announced
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...