×

தொடரும் லாக் டவுன்… தொடரும் மனச்சிக்கல்கள்…

காலையில் சீக்கிரம் எழுந்து ஸ்கூல், ஆபீஸ் கிளம்புகிறவர்கள் ஒரு பக்கம். அவர்களுக்கு தேவையானவற்றை தயார் செய்து கொடுத்து, தானும் கிளம்பும் பெண்கள் ஒரு பக்கம். இப்படி  காலில் றெக்கை கட்டிக்கொண்டு, பரபரப்பாய் இருந்த வீடுகளில்,  Pause பட்டன் அழுத்தியது மாதிரி ஒரே நிசப்தம். குடும்பத்தில், ஒருவருக்கொருவர் பேசவோ, பார்த்துக்கொள்ளவோ கூட இதுவரை நேரம் இருந்திருக்காது. ஆனால், இன்றோ நாள் முழுவதும் ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு, மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனமாய் நேரம் கடத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகமாகி வருகின்றன. இத்தனைக்கும் காரணம் மன விரக்தி. நாளை எப்படி விடியப்போகிறதோ? இந்த மாத சம்பளம் கிடைக்குமா? அடுத்த மாதம் வேலை இருக்குமா? இப்படி பல மனக்கவலைகள்.  குடும்ப வன்முறைகள் பற்றிய செய்திகள் ஒருபுறம், நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதால் அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சிகள் பற்றிய செய்திகள் ஒருபுறம். ஆக மொத்தம் நம் எல்லோருமே மனநலப் பிரச்னைகளால் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சூழலிலிருந்து நாம் வெளி வருவதற்கான ஆலோசனைகளை மனநல நிபுணர் கீர்த்திபாய் வழங்குகிறார். மனிதன் ஒரு சமூக விலங்கு, மற்றவர்களைச் சார்ந்தே வாழ பழக்கப்பட்டவன். திடீரென்று அவனைத் தனித்திருக்கச் சொன்னால் குழப்பங்கள் வரத்தான் செய்யும். கால அட்டவணைப்படி தினசரி வேலைகளைச் செய்ய பழகியவர்கள் இந்த லாக் டவுனால் சற்று நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். மனித மூளை பல பகுதிகளைக் கொண்டது. அவற்றில் உணர்ச்சி (Emotional mind) மற்றும் தர்க்க (Logical mind)  மூளைப்பகுதிகள் இரண்டும் முக்கியமானவை. கொரோனோ நோய்த்தொற்று காலத்தில் அரசு கொண்டு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு என்பது தற்காலிகமானது. இந்த கடுமையான காலகட்டத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருமே கடக்க  வேண்டிய கட்டாய சூழல். இதை நாமும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற நிதர்சனத்தை Logical mind எடுத்துச் சொன்னாலும், Emotional mind பகுதியானது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

‘ஐயோ என் உயிருக்கோ, என் குடும்பத்தினர் உயிருக்கோ ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ? எனக்கு வேலை போய்விடுமோ? வருமானத்திற்கு என்ன பண்ணுவது? குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்?’ இப்படி அடுக்கடுக்கான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
அதிலும் நோய்த்தொற்றால் பாதித்தவர்களை தனிமைப்படுத்தும்போது, அவர்களின் மனநிலை மிக மோசமடைந்து, சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் வர வாய்ப்புண்டு. ஏற்கெனவே மனநல பிரச்னைகளில் இருப்பவர்களின் நிலை கொரோனாவால் மேலும் மோசமாகும். இதுபோன்ற இக்கட்டான சூழலில், நம் மனதை சமநிலையில் வைத்திருப்பது அவசியம். மற்றவர்களைச்சார்ந்து இருப்பதால்தான் மனித மனம் ஆரோக்கியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமூக விலகல், தனிமைப்படுத்துதலால் உண்டாகக்கூடிய தேவையற்ற பயம், பதற்றம் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வழி இல்லையா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் விடை உண்டு. நம் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது ஒன்றே தீர்வு.

என்னைச் சுற்றிலும் கெட்ட செய்திகளும், கெடுதல்களுமே நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எப்படி என்னால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழும். உதாரணத்திற்கு தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளால் உங்களுக்கு பதற்றம் வருகிறது என்றால், அவற்றிலிருந்து சற்று விலகி இருங்கள். அடுத்து, இந்த நாட்களை எப்படி உங்களுக்கு சாதகமாக மாற்றலாம் என்று யோசியுங்கள். இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பல வருடங்களாக நேரமின்மையை காரணம் சொல்லி செய்யாதவற்றையும், இழந்தவற்றையும் இப்போது மீண்டும் பெற முயற்சிக்கலாம். அது உடல், மன ஆரோக்கியம் சார்ந்ததாகவோ, உறவு சார்ந்ததாகவோ இருக்கலாம். லாக் டவுன் காரணமாக உங்கள் வாழ்வியல் முறைகளை சீரமைத்துக்கொள்ளவும் இது நல்ல சந்தர்ப்பம். காலை உணவை மதியமும், இரவு உணவை நடு இரவு என நினைத்த நேரத்தில் சாப்பிடுவது, நினைத்த நேரத்தில் தூங்குவது இப்படி உங்கள் உயிர்க் கடிகாரத்தைக்(Biological Clock) குழப்பிக் கொள்ளாதீர்கள்.

காலை எழும் நேரம், உடற்பயிற்சிக்கான நேரம், குடும்பத்துக்கான நேரம் என கால அட்டவணையை உருவாக்குங்கள். அந்த அட்டவணைப்படி செயல்படுவது என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரணமான நாட்களில் இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. ஒரு பழக்கத்தை உருவாக்க இந்த விடுமுறை நாட்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில்தானே இருக்கிறோம், எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம் என்று நினைக்காமல் நேரத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக இருங்கள். இரவு உணவை குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவது என்று முடிவெடுத்தால், குறித்த நேரத்தில் அதைச் செய்தால், விடுமுறைக்குப் பின்னரும் அது தானாக வழக்கமாகிவிடும். ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்றவுடன் வசதியாக டேபிள், பக்கத்தில் நொறுக்குத்தீனி என்று ஹாயாக நாள்முழுவதும் லேப்டாப்பில் உட்கார வேண்டியதில்லை. அவ்வப்போது வேலைக்கு இடைவேளை கொடுத்து, சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம். வேலை இல்லாத நேரங்களில் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவலாம். அலுவலக வேலைக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, மாலை நேரங்களில், குழந்தைகளோடு விளையாடலாம்.

எனக்கெல்லாம் ‘ஒர்க்கே இல்லை, இதில் எங்கிருந்து ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்பவர்கள், இத்தனை நாட்களாக குழந்தைகள், சொந்தங்களோடு பேசக்கூட நேரம் இருந்திருக்காது. இந்த நாட்களை அதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் உறவினர்களையும், நண்பர்களையும் போனில் அழைத்து பேசலாம். ஏற்கெனவே துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும். ஆன்லைனில் புதியதாக ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஆன்லைனில், ஓவியம், பாட்டு, கலாச்சார வகுப்புகள் நடக்கின்றன. பெரியவர்கள் மொழி, மேலாண்மை, சுய மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற இக்கட்டான நேரங்களில், குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் கோபம், எரிச்சல்  உணர்வுகள் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த நேரத்தில்தான் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பரிவாகவும் நடந்து கொள்வது அவசியம். சின்னச் சின்ன செயலுக்கும், நன்றியையும் பாராட்டையும் மற்றவருக்கு சொல்லுங்கள். இது மனதை வளமாக்கும்.

வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவரவர் அறையில், அவரவர் செல்பேசியில் முகம் புதைத்துக் கொள்வதை விடுத்து, குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து யோகா, தியானம், பிரார்த்னை போன்றவற்றை செய்யலாம். ஒவ்வொரு நாளின் முடிவிலும், அன்று நடந்த நல்ல விஷயத்தை ஒரு டைரியிலோ, நோட்புக்கிலோ எழுதிவரலாம். வீட்டின் மொட்டை மாடியிலோ, வீட்டிற்குள்ளேயும் செய்யக்கூடிய ஸ்கிப்பிங், வாக்கிங், எட்டு நடைப் பயிற்சிகளை செய்யலாம். இவையெல்லாமே மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் மேம்படுத்துபவை.
பள்ளி இறுதித்தேர்வு, கல்லூரித் தேர்வு, தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு நடக்குமா?, எப்போது நடக்குமோ? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். இன்னும் சிலரோ இன்னும் நாட்கள் இருக்கிறதே என்று அலட்சியமாக இருப்பார்கள். இதனால் கடைசி நேரத்தில் தேவையற்ற பதற்றம்தான் மிச்சம். இவர்கள் தாங்களே அட்டவணை போட்டு படிக்கலாம்.

குறிப்பாக, வீட்டிலிருக்கும் முதியவர்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. முடிந்தவரை அவர்களை தனி அறையில் பராமரிக்க வேண்டும். அதற்காக, ஒரேயடியாக தனிமைப்படுத்துவதும் அவர்கள் மனநலத்தை பாதிக்கும். அவ்வப்போது அவர்களுடன் விளையாடுவது, குடும்பத்தின் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை நினைவு படுத்துவது என அவர்களை உற்சாகமாக வைத்திருக்கலாம். இறுதியாக உணவில் அதிகபட்ச கவனத்துடன் இருப்பது அவசியம். ஊட்டச்சத்து மிகுந்த  கீரை வகைகள், காய்கறி, பழங்களை சாப்பிட்டு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியமே, உடல் ஆரோக்கியத்திற்கும் அடிப்படை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஊரடங்கில் முழு ஒத்துழைப்பு தருவது நம்முடைய தனிப்பட்ட ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்கள், நம்மைச்சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும், நமக்காக பணியாற்றும் மருத்துவப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வேலைச்சுமையையும் குறைக்கும் என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

Tags : Lockdown, Depression
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...