×

மொத்த வியாபார கடைகள் மூடப்பட்டதால் விவசாயிகள் பாதிப்பு; தினமும் டன் கணக்கில் வீணாகும் மாம்பழம்: சேலத்தில் நடப்பாண்டு சீசன் களையிழந்தது

சேலம்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி, 2 மாதங்களுக்கு பல்வேறு வகையான மாம்பழங்களின் விற்பனை களை கட்டியிருக்கும். இந்த சீசன் நேரத்தில், உலகின் பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் இங்கிருந்து ருசியான மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூர் மக்களும், மாம்பழ சீசனுக்காக காத்திருந்து ஏப்ரல், மே மாதத்தில் பல வகையிலான மாம்பழங்களை வாங்கி உண்டு மகிழ்கின்றனர். நடப்பாண்டு மாம்பழ சீசன் சற்று தாமதமாக ஏப்ரல் 10ம் தேதிக்கு பின்னே தொடங்கியது. அதுவும் தற்போது உச்சத்தில் மாம்பழ அறுவடை மேற்கொள்ள வேண்டிய நிலையில், ஊரடங்கு காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா ஊரடங்கால் மாம்பழ சந்தையாக கருதப்படும் சேலம், கிருஷ்ணகிரியில் மொத்த வியாபார கடைகள், சில்லரை வியாபார கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால், மா விவசாயம் செய்த விவசாயிகள், தங்களது தோட்டங்களில் விளைந்த மாம்பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

சேலத்தில், சின்னக்கடை வீதியில் சுமார் 50 மாம்பழ மொத்த வியாபார மண்டிகள் உள்ளன. இங்கு ஊரடங்கின் காரணமாக அனைத்து மண்டிகளும் பூட்டப்பட்டு விட்டன. இந்த பகுதியில் உள்ள லட்சுமிநகரை சேர்ந்த நபர், டெல்லி நிகழ்ச்சியில் பங்கெடுத்து திரும்பியதாலும், அவரது உறவினரான ஒரு பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாலும் சின்னக்கடை வீதிக்கு சீல் வைத்து விட்டனர். எந்த வாகனமும் செல்ல வழியில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. ஆண்டுதோறும், சின்னக்கடை வீதியில் இருக்கும் மாம்பழ மண்டிகளுக்கு சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, ஒட்டப்பட்டி, வெள்ளாளகுண்டம், கூட்டாத்துப்பட்டி, பேளூர், கன்னங்குறிச்சி, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, பைரோஜி, சோரகை பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் வரத்து அதிகளவு இருக்கும். நடப்பாண்டும் இந்த பகுதிகளில் தற்போது, சேலம் பெங்களூரா, இமாம் பசந்த், மல்கோவா, செந்தூரா, குண்டு உள்ளிட்ட வகைகளின் மாம்பழங்கள்  நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது. ஆனால், விற்பனை செய்ய வழியில்லாமல் மரத்திலேயே மாங்காய்களை விவசாயிகள் விட்டு வைத்துள்ளனர்.

இதுபற்றி மா விவசாயிகள் கூறியதாவது:நடப்பாண்டு மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. தற்போது, அறுவடையை தீவிரப்படுத்தி மாம்பழத்தை விற்க வேண்டிய நேரம். ஆனால், சேலம் சின்னக்கடை வீதி மாம்பழ மண்டிகள் அனைத்தும் மூடப்பட்டதால், விற்க வழியின்றி பாதிப்பிற்கு ஆளாகி உள்ளோம். கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்று விற்கவும் வழியில்லை.  ஊரடங்கால் வாகனங்களில் மாம்பழத்தை எடுத்துச் செல்ல முடியாமல் இருப்பதே இதற்கு காரணம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மா விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த மாங்காய்கள் நடப்பாண்டு வீணாகிறது. தினமும் டன் கணக்கில் அழிகிறது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சின்னக்கடை வீதியில் உள்ள மாம்பழ மண்டிகளை வேறு இடத்தில் செயல்பட அரசே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அந்த இடத்திற்கு மாங்காய்களை கொண்டு சென்று சேர்த்து, நஷ்டமின்றி செலவிட்ட தொகையையாவது எடுக்க முடியும். இவ்வாறு மா விவசாயிகள் கூறினர்.


Tags : season ,businesses ,closure ,Salem , Farmers affect, Mango, Salem
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு