×

ஈஸ்டர் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் இலங்கையில் இரண்டாவது தாக்குதலுக்கு திட்டம்: போலீசார் தகவல்

கொழும்பு: ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் இரண்டாவது தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்புவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று, ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் தீவிரவாத குழுவான  இலங்கை நேஷனல் தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர் மூன்று தேவாலயங்கள் மற்றும் இலங்கையில் பல சொகுசு விடுதிகளில் தற்கொலை படை தாக்குதலை அரங்கேற்றினர்.  இந்த சம்பவத்தில் 11 இந்தியர்கள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டவர்கள்  காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார், சந்தேகத்தின் பேரில் சுமார் 200 பேரை கைது செய்தனர். பின்னர் கடந்த ஓராண்டாக விசாரணை மேற்கொண்டு வந்த இலங்கை போலீசார், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இலங்கை போலீசின் செய்தித் தொடர்பாளர் ஜலியா செனா ரத்னே கூறியதாவது: கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் 2வது தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தனர்.  குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தீவிரவாதத்தை அரங்கேற்றுவதற்காக சில அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்களை தவறாக வழிநடத்த மூளைச் சலவை செய்து வருகின்றனர்.

மேலும், இதில் சம்பந்தப்பட்ட பல நபர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். உளவுத்துறையை தவறாக வழிநடத்தி குழப்புவதற்காக சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழு இரண்டாகப் பிரிந்து  போக்குகாட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. போலீசார் யாரையும் பொறுப்பற்ற முறையில் கைது செய்யவில்லை. மாறாக, கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

Tags : bombers ,attack ,Easter ,Sri Lanka , Easter bombers plan, second attack , Sri Lanka: Police
× RELATED ‘இது என் திருப்பூர்…...