×

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேருக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை, ஏப். 21: ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஈரான் நாட்டில் உள்ள சிருயே, கிஷ், லவன், பந்தர் இமொகாம், அகலுயே உள்ளிட்ட இடங்களில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 650 மீனவர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக நான் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன். அதில், தமிழக மீனவர்களுக்கு அடிப்படை உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், அவர்களை பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களின் குடும்பங்களில் இருந்து, அந்த மீனவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வருகின்றன. வெளிநாட்டு மண்ணில் உணவு மற்றும் பிற வசதிகள் எதுவும் இல்லாமல் துயரப்படுவதாகவும் தெரிவித்து வருகிறார்கள். எனவே, ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


Tags : fishermen ,Tamil ,Iran ,Chief Minister ,facilities , Iran, Tamil Nadu Fishermen, Union Minister, Chief Minister Edappadi, Letter
× RELATED பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்