×

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சுதா ராமலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கணவன், மனைவி வீட்டிலேயே அதிக நேரம் இருப்பது குடும்ப வன்முறைகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக தேசிய பெண்கள் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதுவரை பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 257 புகார்கள் வந்துள்ளன..   

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 24 குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.  ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்படும் பெண்களால் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. .  உத்தரபிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இணையத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் மாவட்ட அளவில் வீடியோ கான்பரன்ஸ்  மூலம் விசாரிக்கவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுதொடர்பாக எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கான பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன்  எண்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும்.

மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சமூகப்பணியாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசுக்கு ஏப்ரல் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags : curfew ,family violence action , Curfew, court, prosecution
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்