×

எங்களை யார் பார்ப்பார்கள்? ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களே பொறுப்போடு நடந்துக்கோங்க... காவலர் குடும்பங்கள் மக்களுக்கு கோரிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி தொடர்ந்து சுற்றி வரும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சாலைகளில் சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், மக்கள் கண்டுகொள்வதில்லை.  

இந்நிலையில், ஊரடங்கை மீறி செல்லும் பொதுமக்கள் ஒவ்வொருவரையும் வழிமறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கண்ணுக்கு தெரியாத தொற்று என்பதால் விசாரணையின் போது அவர்களுக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் அவர்களின் குடும்பத்தாரிடம் நிலவுகிறது. ஒவ்வொரு போலீசாரும் 2 நாள் மற்றும் மூன்று  நாட்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   எனவே பொதுமக்கள், இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் போலீசார், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் உங்களை போன்று குடும்பங்கள் உண்டு.

மக்களை பாதுகாக்கும் அவர்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவது, அவர்களை நம்பி வயதான  பெற்றோர், குழந்தைகள், மனைவிகள் உள்ளனர். பணி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் தனிமையில்தான் இருக்கிறார்கள். இதனால் காவலர்களின் குடும்பத்தார் தினம் தினம் செத்து பிழைப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.  
எனவே, மக்கள் அத்தியாவசிய பொருட்களை அவரவர் வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து பைக் மற்றும் கார்களில் வெகு தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்று காவலர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Guard families , Curfew, Coronavirus, Tamil Nadu, 63 Case Record
× RELATED கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த 36...