×

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீர் வழங்கினால் கோடை காலத்தில் நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகர்கோவில்:    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதனை கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் 25 அடி மைனஸ், 25 அடி பிளஸ் என மொத்தம் 50 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்கலாம். பிளஸ் மட்டத்தில் உள்ள தண்ணீர் எடுக்கப்பட்ட பின்னர் மைனஸ் மட்டத்தில் உள்ள தண்ணீர் எடுத்து, மாநகர பகுதியில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 8 அடியில் தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் சுமார் இரண்டரை மாதம் வரை விநியோகம் செய்ய முடியும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.   தற்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் 8 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மைனஸ் அளவிற்கு முக்கடல் அணையின் நீர் மட்டம் செல்லும் போது, விநியோகம் செய்யப்படும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு முக்கடல் அணையின் தண்ணீர் மட்டுமல்லாமல், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் இந்த கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என மாநகராட்சி நிர்வாகம் கருதுகிறது. இதன் அடிப்படையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கோரிக்கை வைத்ததன் பேரில் பெருஞ்சாணியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 அனந்தன் சானலில் வரும் தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் பம்பிங் செய்து முக்கடல் அணைக்கு கொண்டு வந்து, மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றது. பெருஞ்சாணி அணையில் இருந்து மேலும் அதிக அளவு தண்ணீர் திறந்து விட மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர கமிஷனர் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ராஜா, சிவகுமார், பாலு, ஜெஸ்டின் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

  அந்த குழு மாநகர பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்வதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், தண்ணீர் சீராக விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும். இவர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது : நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு முக்கடல் அணையில் இருந்து வரும் தண்ணீரை விநியோகம் செய்து வருகிறோம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் வேலை செய்தவர்கள், படித்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அந்த வகையில் மாநகர பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர். இதனால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. முக்கடல் அணையில் உள்ள தண்ணீர் தற்போது வழங்கப்பட்டு வருவதை போன்று வழங்கினால், சுமார் இரண்டரை மாதகாலம் செல்லும்.

ஆனால் மைனஸ் அளவை எட்டும்போது, அதிக அழுத்தத்தில் தண்ணீர் பம்பிங் செய்து எடுக்க முடியாது. இதனால் மாநகர பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் 25 கன அடி தண்ணீர் வீதம் முக்கடல் அணைக்கு பம்பிங் செய்து எடுக்கப்படுகிறது. 50 கன அடி தண்ணீர் கிடைக்கும் அளவிற்கு மாவட்ட நிர்வாகம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டால், மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படலாம். மேலும் இந்த கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி மாநகர பகுதியை காப்பாற்றி விடலாம் என தெரிவித்தார்.


Tags : Nagercoil ,Pachiparappa Dam No , No water,Nagercoil , summer , provided
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது