சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 டீன்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பணியிடங்களில் புதிதாக 3 டீன்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 3 டீன்கள் ஓய்வு பெற்றனர். அந்த பணியிடங்களில் புதிதாக 3 பேரை நியமிக்க வேண்டும் என்று, மருத்துவக் கல்வி இயக்குநர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அவரது கருத்துருவை ஏற்ற அரசு, பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை அரசு செயலாளர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பணியிடத்தில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியின் மகளிர் நோயியல் துறையின் பேராசிரியர் எம்.பூவதி நியமிக்கப்படுகிறார்.
அவர் தற்காலிக பதவி உயர்வு மூலம் அந்த கல்லூரியின் டீனாக நியமிக்கப்படுகிறார். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் ராஜேந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பணியிடத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறையின் பேராசிரியர் ஆர்.மணி தற்காலிக பதவி உயர்வு மூலம் டீனாக நியமிக்கப்படுகிறார். மேலும், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக இருந்த வசந்தி ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பணியிடத்தில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருந்து துறையின் பேராசிரியர் இ.தரணிராஜன் டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.