×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கனஜோராக நடக்குது கள்ளச்சாராய விற்பனை: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆறாக ஓடுகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 21 நாட்கள் ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் 230 கோடிக்கு டாஸ்மாக் மூலம் வருமானம் இருந்து வந்தது. இந்தநிலையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எப்படியாவது மது குடிக்க வேண்டும் என்பதால் முன் கூட்டியே டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்கி விட்டனர். இதனால் கடைசி நாளில் மதுபானம் விற்பனை 2 மடங்கு அதிகரித்தது.

ஆனால் தினமும் கூலி வேலைக்குச் சென்று விட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை மதுபானம் வாங்கி குடித்துவந்த தொழிலாளர்கள் பலர் மதுபானம் கிடைக்காமல் தவித்து வந்தனர். இவர்கள் கூடுதல் விலைக்கு கூட மதுபானம் வாங்க தயாராக இருந்தனர். இதைத் தெரிந்து கொண்ட சில ஆளும் கட்சியினர், ரவுடிகள், ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த கும்பல் இந்த 21 நாள் கடையடைப்பை சரியாக பயன்படுத்தத் தொடங்கினர். அவர்கள் ஏற்கனவே மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் குவித்து வைத்துள்ளனர். அந்த மது பாட்டில்களின் மூடியை திறந்து, அதில் பாதியை எடுத்து தனியாக ஒரு பாட்டிலில் ஊற்றிவிடுகின்றனர்.

பின்னர் குறைவாக இருக்கும் பாட்டில்களில் எரிசாராயம்(ஸ்பிரிட்) அல்லது தண்ணீர், குளிர்பானங்களை கலந்து 3 மடங்கு, 4 மடங்கு அதிகமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக தி.நகர், தேனாம்பேட்டை, தாம்பரம், பெரும்புதூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, மாதவரம், பொன்னேரி, பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய இடங்களில் அதிகமாக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதைத் தவிர ஸ்பிரிட்டில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை கலந்து போலி மதுபானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதை வடசென்னையில் கொருக்குப்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பல இடங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மதுபான விற்பனை கும்பல்களுக்கு ஆளும் கட்சி ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலூர் அருகே புலிமேட்டில் கள்ளச்சாராய கும்பல்களை தடுத்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும், ஆம்பூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த கும்பல்களை பொதுமக்கள் தடுத்து விரட்டியுள்ளனர். கள்ளச்சாராயம் மற்றும் ஸ்பிரிட்டில் தண்ணீர் கலந்து விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுபாட்டில்களை வாங்கி குவித்த மதுவிலக்கு போலீஸ் அதிகாரி
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மதுவிலக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் டாஸ்மாக் பார் உரிமையாளர்களை மிரட்டி மதுபானங்களை மொத்தமாக கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது. டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் மதுவிலக்கு உயர் அதிகாரி ஒருவர் இதுபோன்ற மது பாட்டில்களை ஏராளமாக வாங்கி குவித்துள்ளாராம். இதை அவர் ஆண்டுக் கணக்கில் கூட குடிக்க முடியாது. நண்பர்களுக்கு கொடுத்தால் கூட தீர்ந்து விடாது. ஆனால் மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்யும் அதிகாரியால்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமுடியும் என்கின்றனர் மதுவிலக்குப் போலீசார்.

Tags : Task force ,state ,shops ,Tamil Nadu ,river ,government , Tamil Nadu, Task Shop, counterfeit, corona virus
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...