×

பெரம்பூர், திருச்சி பொன்மலை பணிமனையில் 273 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றும் பணியில் தொய்வு

சென்னை: பெரம்பூர், திருச்சி பொன்மலை பணிமனையில் 273 ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றும் பணியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் வார்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டால் சென்னை ஐசிஎப், தாம்பரம் பணிமனையில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் செய்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 144 தடை உத்தரவின் காரணமாக ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று பெரம்பூர் ரயில்வே பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்ற கடந்த மாதம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தெற்கு ரயில்வே முதற்கட்டமாக 400க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டாக மாற்றும் பணியை தொடங்கியது.  தமிழகத்தில் திருச்சி பொன்மலை பணிமனையில் 110 பெட்டிகளும், சென்னை பெரம்பூர் பணிமனையில் 163 பெட்டிகளும் தனிமைப்படுத்துதல் வார்டாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

இதில், முதலாவது பெட்டியில் மருந்து பொருட்கள் வைக்கவும், மீதமுள்ளவற்றை கொரோனா வார்டாகவும் பயன்படுத்தலாம். ஒவ்வொன்றிலும் இரண்டு படுக்கைகள் வீதம் ஒரு பெட்டியில் 16 பேர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பெட்டியும் முழுமையாக மாற்றப்பட்ட பின் 24 பெட்டிகளாக இன்ஜினில் இணைக்கப்படும். பின்னர் பெரம்பூர் பணிமனையில் இருந்து வில்லிவாக்கம் வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். இந்த பெட்டிகள் தனிமைப்படுத்தப்படுபவர்களின் தேவைக்கு ஏற்ப அந்தந்த ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இதுதொடர்பாக பெரம்பூர் பணிமனையின் அதிகாரி கூறுகையில், ‘‘தற்போது வரை இரண்டு பெட்டிகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, தேவையான பொருட்கள் கிடைக்காததால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து பெட்டிகள் மாற்றப்பட்டு வருகிறது’’ என்றார்.



Tags : Corona Ward Ponmalai Workshop ,Train Compartments ,Ward 273 ,Coroner , Perampur, Trichy Ponmalai, Workshop, Corona Ward
× RELATED கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில்...