×

சீரம் நிறுவன தலைமை அதிகாரி கூறியது பொய் : உலகிலேயே இந்தியாவில் தான் ‘கோவிஷீல்டு’ விலை அதிகம்

புதுடெல்லி : சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை உலகிலேயே இந்தியாவில் தான் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, சர்வதேச தடுப்பூசி  விலைப்பட்டியல் மூலம் அம்பலமாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின்  கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில்,  தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வருவதால், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியது. அதன்படி, ஒரு டோஸ்  மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்தது.மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம், இந்த விலை அமெரிக்கா,  ரஷியா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என்று தெரிவித்தது. மேலும், தங்களது  மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் மத்திய அரசு செயல்படுத்தும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும், 50 சதவிகித தடுப்பூசி உற்பத்தி மாநில அரசுகள்  மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பிலும்  எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பாஜகவை சேர்ந்த கோரக்பூர் எம்எல்ஏவும் மருத்துவருமான ராதா மோகன் தாஸ் அகர்வால், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சீரம் நிறுவனத்தின்  தலைவர் ஆதார் பூனவல்லா கொள்ளைக்காரனை விட மோசமானவர். அவரது நிறுவனத்தை மத்திய அரசு தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ்  கையகப்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டார். இவரது கண்டனம் பெரும் கவனத்தை பெற்றது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் ஒரு டோஸ்  விலை ரூ.600 (தனியார் மருத்துவமனைக்கு) நிர்ணயிக்கப்பட்ட நிலையில், யுனிசெஃப் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி சந்தை டாஷ்போர்டு  வெளியிட்ட சர்வதேச தடுப்பூசி விலை பட்டியலில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. அதாவது, சீரம் நிறுவனத்தின் ஒரு டோஸ் விலை இந்தியாவில் சுமார் 8 அமெரிக்கன் டாலர் (ரூ. 600) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே  தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தலா 5.25 டாலர் (ரூ.395), அமெரிக்காவில் 4 டாலர் (ரூ.300), வங்கதேசத்தில் 4 டாலர் (ரூ.300),  பிரேசிலில் 3.15 டாலர் (ரூ.237), இங்கிலாந்தில் 3 டாலர் (ரூ.225), ஐரோப்பிய நாடுகளில் 2.15 முதல் 3.5 டாலர் (ரூ.162 – ரூ.263) என்ற விலையில்  விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி விலை அதிகம்  என்பது தெரியவந்துள்ளது. கோவிஷீல்டுக்கான விலை உயர்வை சீரம் நிறுவனம் அறிவித்ததை மத்திய அரசு ஒப்புக் கொண்டதா? என்பது குறித்து  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோரிடம்  கேட்டபோது, அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்று, யுனிசெஃப் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி சந்தை டாஷ்போர்டு தெரிவித்துள்ளது….

The post சீரம் நிறுவன தலைமை அதிகாரி கூறியது பொய் : உலகிலேயே இந்தியாவில் தான் ‘கோவிஷீல்டு’ விலை அதிகம் appeared first on Dinakaran.

Tags : CEO ,India ,New Delhi ,Serum Company ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்