×

அதிகளவில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை மீன், இறைச்சிக்கடைகளை நகருக்கு வெளியே மாற்ற உத்தரவு: தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி

சென்னை:  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு தலைமை செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் குறிப்பாக கொரோனா மற்றும் காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் என்-95 மாஸ்க் மற்றும் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்துதான் நோயாளிகளை பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீன், கறிக்கடைகளில் தற்போது அதிக கூட்டம் வருவதாக கூறுகிறார்கள். அந்த கடைகளை நகரத்தைவிட்டு தாண்டி, பொது இடங்களில் மைதானங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள், கடையை மாற்ற மறுத்தால் அந்த கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களை அங்கே இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  டெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டுவிட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்கள் மூலம் தான் கொரோனா பரவியுள்ளது. தற்போது அவர்களில் 800 பேரை கண்டுபிடித்துவிட்டோம். 300 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. போன் நம்பர் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. அதை வைத்து விலாசத்தை எடுக்க போலீஸ் முயற்சி செய்கிறது. சிலர் போனை ஆப் செய்து வைத்துள்ளனர்.

சிலர் இங்கு வந்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்களை கண்டுபிடித்துவிடுவோம். அப்போதுதான், தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க முடியும். தமிழகத்தில், பிசிஆர் டெஸ்ட் மூலமே கொரோனா பரிசோதனை செய்கிறோம். அதாவது, தொண்டையில் சளியை எடுத்து சோதனை செய்கிறோம். இதில்தான் உண்மையான நோய் குறித்த தகவல் தெரியவரும். அதனால், நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்கிறோம். அதனால்தான் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்து வீடுகளில் பாதுகாப்பாக இருப்பவர்களை போலீஸ், சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் நோய் தொற்று வரும் ஆபத்து உள்ளது. ஒரு இடத்தில் அப்படி நடந்து விட்டது. அதனால் அவர்களாகவே வீட்டுக்குள் இருந்து, கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும். யாராவது வீட்டு பாதுகாப்பை மீறி வெளியே வந்தால், அரசாங்கமே அவர்களை பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் தங்க வைத்துவிடும். 3 லேயர் மாஸ்க் எச்எல்எல் கம்பெனியில் ஒன்றரை கோடி ஆர்டர் கொடுத்துள்ளோம்.

திருப்பூரில் தினசரி 2 கோடி மாஸ்க் தயாராகி வருகிறது. என்-95 வெளிநாட்டில் இருந்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை மட்டும் நம்பி இல்லாமல், மாநில அரசும் மாஸ்க், வென்டிலேட்டர் வாங்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு ஒரு மாத வாடகையை கேட்க கூடாது என்று சொல்லியுள்ளது. தமிழக முதல்வர் 2 மாதம் வாடகை கேட்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று, யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யாமல் முழு சம்பளத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags : Shanmugam , Fish, Meat Shops, Chief Secretary Shanmugam
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!