×

அத்தியாவசிய பட்டியலில் இருந்து பதிவுத்துறை நீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியாக அத்தியாவசிய பட்டியலில் இருந்து பதிவுத்துறையை நீக்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  சுகாதாரம், உள்ளாட்சி, மின்வாரியம், குடிநீர் வாரிய ஊழியர்களை தவிர மற்ற அனைத்து அரசு அலுவலக ஊழியர்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதிவுத்துறையில் நடப்பாண்டு வருவாய் இலக்கை காரணம் காட்டி மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களை திறக்க ஐஜி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் வீட்டை விட்டு வெளியே அஞ்சி வருகின்றனர். இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் சார்பில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடியின் அறிவுரையை பின்பற்றும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை விட துறை தலைமை மறுத்து வந்தது. மேலும், பத்திரப்பதிவின்போது கைரேகைகளை மட்டுமே வைக்க வேண்டும். அதோடு நிலத்தை விற்பவர், வாங்குபவர் மட்டுமின்றி சாட்சிகளும் கைரேகளை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்வதால், கொரோனா ஆபத்து அதிகரித்துள்ளதாக ஊழியர்களும், பொதுமக்களும் கருதினர். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பலரும் தமிழகத்தில் உள்ள தங்களது நிலம் தொடர்பான பத்திரப்பதிவுக்கு வருகின்றனர். இதனால் ஊழியர்கள் கூடுதல் ஆபத்து இருப்பதாக கருதினர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் 71 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் 11, கோவை மண்டலத்தில் 1, கடலூர் மண்டலத்தில் 1, மதுரை மண்டலத்தில் 7, சேலம் மண்டலத்தில் 20, திருச்சி மண்டலத்தில் 7, தஞ்சை மண்டலத்தில் 7, நெல்லை மண்டலத்தில் 8, வேலூர் மண்டலத்தில் 9 என மொத்தம் 71 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் 100 முதல் 300 பத்திரம் வரை பதிவு செய்யப்படுவது வழக்கம்.அதில் திருவொற்றியூரில் பத்திரப்பதிவுக்கு நேற்று பலர் கூடியிருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, கூடியிருந்தவர்களை விரட்டி அடித்தனர். அதேபோன்ற நிலைமை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடந்தது.

ஒரு பக்கம் அதிகாரிகள் திறந்து வைத்திருக்க, மறுபக்கம் வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் சம்பவமும் நடந்ததால் பரபரப்பு நிலவியது. இது குறித்தும், தினகரன் செய்தி குறித்தும் முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. அவர் இது குறித்து விசாரித்துள்ளார். அதேநேரத்தில் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் ஆறுமுகநவராஜ், அந்த துறையின் ஐஜிக்கு கடிதமும் எழுதியிருந்தார். இந்தநிலையில், அத்தியாவசியப் பட்டியலில் இருந்து பத்திரப்பதிவுத்துறையை நீக்கி, தமிழக அரசு அதிரடியாக நேற்று உத்தரவிட்டது. இதனால் நாளை முதல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்காது என்று கூறப்படுகிறது.

Tags : Removal ,Registration Department from Essential List ,Government of Tamil Nadu Essential List ,Department of Registration of Removal , Removal , Registration Department , Essential , Government , Tamil Nadu
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...