×

தொழிலையும் விட்டுவைக்கவில்லை கொரோனா; கோவை, திருப்பூரில் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடல்: 2.5 லட்சம் பேர் வேலை இழந்தனர்

சோமனூர்: கொரோனா பாதிப்பு காரணமாக கோவை, திருப்பூரில் 35 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று விசைத்தறி நிறுவனங்களை நிறுத்தி முழு அளவில் விடுப்பு கொடுத்து நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; உலக அளவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இது சம்பந்தமாக எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, தமிழக அரசு அறிவிப்பின்படி நேற்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி முடிய கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்களில் உள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இயக்காமல் உற்பத்தியை நிறுத்துவது.

இதனால் நம்மையும் தொழிலாளர்களையும் இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்றி கொள்வது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் சங்கங்கள் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சங்கம் பொறுப்பாகாது. ஜவுளி உற்பத்தியாளர்கள் உடனடியாக விசைத்தறியாளர்களின் பிடித்து வைத்துள்ள கூலி பணத்தை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதன்காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.



Tags : power plants ,Corona ,Coimbatore ,Tirupur ,Closure , Industry, Corona, Coimbatore, Tirupur, Power Plants, Closure
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...