×
Saravana Stores

திருநின்றவூர் அருகே நண்பனுடன் குளிக்க சென்றபோது கால்வாயில் மூழ்கி இரட்டையர் மாயம்: தேடும் பணி இரவில் நிறுத்தம்

திருநின்றவூர்,: திருநின்றவூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் நண்பருடன் குளிக்க சென்ற இரட்டையர்கள், தண்ணீரில் மூழ்கினர். அவர்களை, தீயணைப்பு படை வீரர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் தேடியும் மீட்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநின்றவூர், பிரகாஷ் நகர், டவர் தெருவை சேர்ந்தவர் மோகன் (44). இதே பகுதி சிடிஎச் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மகன்கள் ஜஸ்டின் (13), ஜெபஸ்டின் (13). இரட்டையர்கள். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் பொருட்டு பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதையொட்டி, நேற்று காலை 11.30 மணியளவில் ஜஸ்டின், ஜெபஸ்டின் ஆகியோர் அவர்களது நண்பன் தீபக் என்பவருடன் ஆவடி அருகே முத்தாப்புதுபேட்டை, கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிக்கு சென்றனர்.

அங்கு, ஓடும் தண்ணீரில் 3 பேரும் குளிக்க இறங்கினர். அதில், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால், மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும், அங்கிருந்த 2 வாலிபர்கள், தண்ணீரில் குதித்து, தீபக்கை மட்டும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதற்குள், ஜஸ்டின், ஜெபஸ்டின் ஆகியோர் மாயமாகினர். தகவலறிந்து ஆவடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து அதிகாரி வீரராகவன் தலைமையில் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கிருஷ்ணா கால்வாயில் மாயமான 2 சிறுவர்களையும் மாலை சுமார் 6 மணி வரை தேடினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை.

பின்னர், இரவு நேரம் ஆனதால் இருளில் தேட முடியாததால் தீயணைப்பு வீரர்கள் பணியை கைவிட்டனர். இன்று (25ம் தேதி) காலை மீண்டும் தேடும் பணியை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது. புகாரின்படி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றபோது இரட்டையர்கள் தண்ணீரில் மூழ்கி மாயமான சம்பவம், திருநின்றவூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : canal ,Thiruninvur Thiruninvur , Thirunnavoor, friend, canal
× RELATED திருநெல்வேலி மாவட்டத்தில் பாசன...