×

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கூடுதலாக ரூ.500 கோடி தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கூடுதலாக ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து  தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேரவையில் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள 92,406 உள்நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.  இது தவிர, தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக கூடுதலாக படுக்கை வசதிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மேலும், தமிழகத்தில் அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளிலும், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு படுக்கை வசதிகளை எற்படுத்தும்போது, தீவிர சிகிச்சை வசதிகளை உருவாக்குவதற்காக, 560 வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், 500 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ஏற்படுத்த தேவையான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் உள்ளன. தமிழகத்திலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளிலும், 750 படுக்கை வசதிகள்  கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி படுக்கை வசதிகளாக மாற்ற  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம்-1939ன் விதி 41, 43, 44-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், அதற்கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால், அவரைப் பற்றிய தகவல்களை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்லது 24 மணி நேர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் எற்கனவே அறிவிக்கப்பட்ட தொடர்பு எண்ணிலும் (044-29510500, 29510400 மற்றும் கைபேசி எண்.94443 40496, 87544 48477 மற்றும் இலவச சேவை எண்.1800 120 555550) ஆகிய மையங்களில் உடனடியாக தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத் தலைவர் ஆகியோரின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின்  வீட்டுக் கதவில், “வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்ற விபரம் ஒட்ட  வேண்டும். இந்த பட்டியலின் விபரம் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள்  மற்றும் களத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட  வேண்டும். இதனால், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் பிற மக்கள் தொடர்பு  கொள்வது தவிர்க்கப்படும். வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, சமுதாயத்தின் நலன் கருதி, சுய தனிமைப்படுத்துதல் மூலம், அவர்கள் யாரும் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க கண்காணிக்கப்படுவர். கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ₹60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், அதை கூடுதலாக்கி இப்பொழுது ₹500 கோடி கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரைக்கும், எந்த ஒரு மக்களும் பாதிக்கப்படக் கூடாது. அந்த நோக்கத்தின் அடிப்படையிலே செயல்பட்டு கொண்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : campaign , 500 crores , addition , coronavirus,anti-virus campaign
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...