×

சென்னையில் உயிரை பணயம் வைத்துப் பணியாற்றும் கூலித் தொழிலாளிகள்: மனிதாபிமானமற்று செயல்படும் காண்ட்ராக்டர்!

சென்னை:  உலகின் பல்வேறு இடங்களில் வானுயர கட்டிடங்களில் ஏரியும், அந்தரத்தில் தொங்கியும் சாகசம் காட்டும் நபர்களை நேரிலும், காணொளியிலும் கண்டு அச்சமும், வியப்பும் ஒருசேர இதுவரை நாம் அடைந்திருப்போம். ஆனால், சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி வண்ணம் பூசி வருகிறார். கட்டிடங்களில் வண்ணம் பூசுவதற்கு உயரமான இரும்பு ஏணிகள், ஸ்பிரேயர் என ஏராளமான நவீன கருவிகள் வந்துவிட்ட நிலையிலும், இன்றைய காலகட்டத்தில், வாடகை பணத்தை மிச்சம் செய்வதற்காக ஆபத்தை உணராமல் பணியாளரை ஈடுபடுத்திய செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தை அறியாமல் அந்தரத்தில் வேலை வாங்கும் செயல் குறித்து தனியார் வணிக வளாக உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது; வண்ணபூச்சு மேற்கொள்ளும் பணியை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், மனிதர்களை ஈடுபடுத்துவதும், கருவிகளை கையாளுவதும் குத்தகை பெற்ற காண்ட்ராக்டர் விருப்பம் என்று சிறிதும் கவலையின்றி பதிலளித்தார். கரணம் தப்பினால் மரணம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தினசரி அந்தரத்தில் தொங்கியபடி வேலை பார்த்தால்தான் தனக்கு கூலி கிடைக்குமென்று வறுமையை நிலைநாட்டி பேசுகிறார் கூலி தொழிலாளி தனசேகரன். உயரமான இடங்களில் பணியாற்றும் நபர்கள், முறையான பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இருந்தாலும், பணத்திற்காக விபரீதம் அறியாத பாமரர்களும், அதனால் விளையும் ஆபத்தை உணராத காண்ட்ராக்டர்களும் உள்ளவரை இந்த நிலை மாறாது என்பதே நிதர்சமாக உள்ளது.

Tags : contractor ,Chennai , Chennai, mercenaries, humanitarian, contractor
× RELATED நெல்லை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை..!!