சென்னை: சட்டமன்ற பேரவை விதி 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று படித்த அறிக்கை:
* திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களினால் மூடாதவாறு இருக்க, 27 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம், ஹெலன் நகர், ராஜாக்க மங்களம் மற்றும் கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் 39.90 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
* தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளத்தினை 25 கோடி மதிப்பீட்டில் நீட்டித்து, கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.
* ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-வடக்கு மற்றும் மண்டபம்-தெற்கு கிராமங்களில் 20 கோடி செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
* கடலூர் மாவட்டம் அன்னன்கோயில் மற்றும் புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் 10 கோடி மதிப்பீட்டில் புதிய வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும். மேலும், முடசலோடை கிராமத்தில் உள்ள மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக 9 கோடியே 50 லட்சம் செலவில் நீட்டிக்கப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம், புது குப்பம் மற்றும் உய்யாலி குப்பம் கிராமங்களில், 17 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
* 1.60 கோடி மதிப்பீட்டில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், 3.50 கோடி மதிப்பீட்டில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், 3 கோடி மதிப்பீட்டில் 5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், 1.20 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
* கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தலா 1,000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க 14.73 கோடி வழங்கப்படும்.
* 90.35 லட்சம் கால்நடைகளுக்கு ₹22.03 கோடி செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.
* ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்தி பிரிவு, 18.03 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
* தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.