×

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 5 பிரத்யோக மருத்துவமனைகளை உருவாக்க மத்திய அரசு முயற்சி!

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற நாட்டில் குறைந்தபட்சம் 5 பெரிய மருத்துவமனைகளை தனித்து உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நாட்டில் தனித்த 4 அல்லது 5 பெரிய மருத்துவமனைகள் தேவைப்படும் என அரசு கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை தொடர்ந்து, ஏற்கனவே இயங்கும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட, தனித்த வார்டுகளை அமைப்பதில் சிரமம் இருப்பதாக கூறும் மருத்துவமனை நிர்வாகங்கள், அது மற்ற நோயாளிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றன.

எனவே பல்வேறு மாநிலங்களிலும் விடுதிகள், தொழில்நுட்ப கல்லூரிகளை தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் 400 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மொத்தமாக தமிழகத்தில் 1,121 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை உருவாக்கியிருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல மாநில எல்லையோர பகுதிகளில் கூடுதலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பழைய தொழில்நுட்ப கல்லூரி விடுதிகளை தயார் செய்யவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Central Government ,Specialty Hospitals ,hospitals ,government ,Coronavirus Central , Corona, treatment, private hospital, central government, effort
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...