×

சுவரில் தலையை முட்டி கதறினார் கொரோனா ட்ரீட்மென்ட் கொடுக்கப்போறியா, இல்லையா... வாலிபரின் அலப்பறையால் தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கோரி தனியார் மருத்துவமனை ஒன்றில் வாலிபர் ஒருவர் சுவரில் மண்டையை உடைத்துக்கொண்டு கலாட்டாவில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் தேனாம்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென மருத்துவமனை வரவேற்பாளரிடம் ‘எனக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. நான் இங்கு சிகிச்சை பெற வந்திருக்கிறேன்’ என கூலாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியான மருத்துவமனை ஊழியர்களும் அங்கு இருந்த நோயாளிகளும் அலறியடித்து அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து, அந்த வாலிபரை தனி வார்டுக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவருக்கு சாதாரண சளி, இருமல் இருந்தது சோதனையில் தெரியவந்தது. அந்த வாலிபரிடம் டாக்டர்கள் ‘உங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை’ என கூறியிருக்கின்றனர். எனினும் அந்த வாலிபர் ‘எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியும். எனக்கு சிகிச்சை அளியுங்கள்’ என மீண்டும் ரகளையில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் ‘எனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன்’ என கூறி சுவரில் தனது தலையை மோதி உடைத்து கொண்டார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த வாலிபரை பிடித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்களை அழைத்து, அந்த வாலிபரை போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அந்த தனியார் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Tags : Head ,Corona , Head on the wall, scream, Corona Treatment, Plaintiff, Thenampettai, Private Hospital
× RELATED உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம்...