×

நாகர்கோவில் பாலமோர் சாலையில் உயிர் பலிக்கு காத்திருக்கும் பள்ளங்கள்: குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மெத்தனம்

நாகர்கோவில்: பாலமோர் சாலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் சாலைகள் சீரமைக்க முடியாமல் விபத்துகளில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. குமரியில் அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் புத்தன்அணை திட்டம் ஆகியவற்றுக்காக களியல் மற்றும் புத்தன்அணை பகுதியில் இருந்து பாலமோர் சாலை வழியாக தண்ணீர் கொண்டு வர குழாய்கள் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதனால் களியல் முதல் புத்தேரி வரை சாலைகள் தோண்டப்பட்டன. தோண்டப்பட்ட சாலைளை மீண்டும் மூடாததால் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இந்த பள்ளங்களில் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் அடிக்கடி சிக்கி கொள்வதுடன், அதிவேகமாக வரும் டாரஸ் லாரிகள், பஸ்கள், சைக்கிள், பைக்கில் வருபவர்கள் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இது தவிர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் உரிய நேரத்தில் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலைகளை சீரமைக்க பாலமோர் சாலையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளை கலெக்டர் நிர்பந்தம்செய்ததை அடுத்து, 10 கி.மீ சாலை பணிகள் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் சாலை சரி செய்யப்பட்டது. இருப்பினும் புத்தேரி பாலம் முதல் இறச்சகுளம் வரையிலும் , துவரங்காடு முதல் அழகியபாண்டியபுரம், தடிக்காரன் கோணம், களியல் பகுதிகளில் குடிநீர் வாடிகால் வாரிய அதிகாரிகள் பணிகளை பாதியில் நிறுத்தி உள்ளனர்.

திட்டுவிளை சந்திப்பு உள்பட பல பகுதிகளில் சாலைகள் முழுவதும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் விபத்துகள் அரங்கேறி உயிர் பலிகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. தற்போது 5 கி.மீ சாலையை சரி செய்ய வருகிற மார்ச் 31ம் தேதி டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 1ம் தேதி பணிகள் நடைபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் 5 கி.மீ பகுதியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டி உள்ளது. அதனையும் அவர்கள் ஒப்படைத்தால் சாலை முற்றிலும் சரி செய்யப்பட்டு விடும் என்றனர்.

நெடுமங்காடு சாலையில் பணிகள் இல்லை
நெடுமங்காடு சாலையில், ஆரல்வாய்மொழி முதல் ஆண்டித்தோப்பு வரை குண்டுகுழிகளாக உள்ளன. எனவே அந்த சாலையை சீரமைக்க நீண்ட நாளாக கோரிக்கை இருந்து வருகிறது. அவ்வப்போது, பேட்ச் வொர்க் மட்டும் நடக்கிறது. இந்த பேட்ச் வொர்க் பணியும் தரமற்று இருப்பதால், சரி செய்த சில நாட்களிலேயே பெயர்ந்து விடுகிறது. எனவே இதனையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : deaths ,Palmore Road ,Drinking water board officials ,Nagercoil ,Floods: Drinking Water Board , In Nagercoil, Palamore Road, grooves
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...