×

ம.பி காங். எம்எல்ஏக்களை சந்திக்க அனுமதிக்காததை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் கைது

பெங்களூரு: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க வந்த அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங்கை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை பாஜ ேமற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தில் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்துள்ள பாஜ, காங்கிரஸ் கட்சியை ேசர்ந்த 23 எம்எல்ஏக்களை பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த பத்து நாட்களாக தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசு முழு பாதுகாப்பு கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அம்மாநில சபாநாயகர் கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி பேரவை கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை. சபாநாயகர் முடிவை எதிர்த்து பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. இதில் சபாநாயகர் உத்தரவை ரத்து செய்து 24 மணி நேரத்தில் நம்பிக்ைக வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டது. நாங்கள் கேட்ட எதுவும் அவர் செய்து கொடுக்காமல் புறக்கணித்தார். கடந்த இரண்டாண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. பல வழிகளில் மக்கள் அவதிக்குள்ளாகியும் அதை தீர்ப்பதற்கான முயற்சியை கமல்நாத் மேற்கொள்ளவில்லை.

சொந்த கட்சி எம்எல்ஏக்களுக்கு துளியும் மரியாதை கொடுக்கவில்லை. அவரது குடும்ப நலனுக்கும் ஆதரவாளர்களின் நலனுக்கும் மட்டுமே உழைத்து வருகிறார். அவர் மீது அதிருப்தி கொண்டதால் நாங்கள் எங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினோம். அதன் நகலை மாநில ஆளுநருக்கும் அனுப்பியுள்ளோம். நாங்கள் ராஜினாமா முடிவு எடுக்க பாஜ தலைவர்கள் காரணம் என்று சொல்வதில் உண்மை கிடையாது. நாங்கள் சுயமாகத்தான் ராஜினாமா முடிவு எடுத்தோம். எங்களை யாரும் இயக்கவில்லை என்று கூறினர். இந்நிலையில் ரிசார்ட்டில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக போபாலில் இருந்து மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய்சிங் விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காைல 6.20 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் டி.ேக.சிவகுமார், கிருஷ்ணபைரேகவுடா தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு சென்றனர்.

வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் திக்விஜய்சிங்கிற்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது. நான் தகராறு செய்ய வரவில்லை. எங்கள் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் பேசி அழைத்து செல்ல வந்துள்ளேன். சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று துணை போலீஸ் கமிஷனரிடம் கேட்டார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்களும் வலியுறுத்தினர். ஆனால் போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தனர். போலீசாரின் போக்கை கண்டித்து திக்விஜய்சிங் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அவருடன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் தர்ணாவில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மத்திய, மாநில பாஜ அரசுகள் ஜனநாயக படுகொலை செய்கிறது, குதிரை பேரம் நடத்துகிறது, மத்திய பிரதேசத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது என்று குற்றம்சாட்டி முழக்கம் எழுப்பினர்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். இதனால் ரிசார்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். சுமார் 1 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்திய திக்விஜய்சிங்கை போலீசார் கைது செய்து எலகங்காவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவருடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலைக்குள் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் யோசனை உள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து திக்விஜய்சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் நல்லாட்சி நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் பாஜ வசம் இருக்க வேண்டும், அதன் மூலம் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை வியாபாரம் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக படுகொலையை பாஜ மேற்கொண்டு வருகிறது. மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருப்பதால் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க 17 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜ ஆட்சி அமைத்துள்ளது போல், மத்திய பிரதேசத்திலும் குதிரை பேரம் நடத்தி 23 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சட்ட விரோதமாக ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

Tags : protest ,Digvijay Singh , Mp Cong. MLA, Darna agitation, Digvijay Singh, arrested
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...