×

ஜூலை முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு கொரோனாவிற்கு முதல் மருந்து ஜெர்மனி நாட்டில் கண்டுபிடிப்பு: மருந்து நிறுவனத்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம்

நியூயார்க்: ஜெர்மனியை சேர்ந்த கியூர்வேக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக முதல் மருந்தை உருவாக்கி உள்ளது. ஜூலை முதல், இந்த மருந்தை பயன்பாட்டிற்கு விடுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அங்கு மட்டும் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிறன்று கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 16 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 80,860 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6700 பேர் குணமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இங்கு நிலைமை கட்டுக்குள் வரும் அதே நேரத்தில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகின்றது. உயிரிழப்புக்களும் நூற்றுக்கணக்கில் உயர தொடங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுக்கு எதிராக முதல் மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான கியூர்வேக் என்னும் நிறுவனம் தான் கொரோனாவிற்கு எதிரான மருந்தை உருவாக்கி உள்ளது. இந்நிறுவனமானது தற்போது இந்த மருந்தை சோதனை செய்து வருகின்றது. வரும் ஜூலை முதல் இந்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து நிறுவனத்தை கையகப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார். ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்து மருந்தை கொள்முதல் செய்வதற்கும், மொத்தமாக நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கும் அதிபரின் நிர்வாகம் முயன்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிறுவனத்தை வாங்க முயற்சிக்கும் அதிபர் டிரம்ப், இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளதாக ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனத்தை வாங்கினால் மருந்து அமெரிக்கா வசம் வரும், அவ்வாறு வரும்பட்சத்தில் வேறு நாடுகளுக்கு மருந்தை விற்பனை செய்யாமல் அமெரிக்காவிற்கு மட்டுமே மருந்தை பயன்படுத்துவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கியூர்வேக் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையின்போது அதிபர் டிரம்ப் இதனை குறிப்பிட்டதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான மருந்தை உருவாக்குவதற்கான செலவு அதிகம், அதே நேரத்தில் குறைந்த அளவு மருந்தை உருவாக்குவதற்கு பல நாட்கள் ஆகும் என்பதால் தான் அமெரிக்கா மருந்தை வாங்கும், ஆனால் யாருக்கும் விற்காது என பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவிற்கு எதிரான மருந்துக்கு மட்டும் 10 பில்லியன் டாலர்(ரூ.74,110கோடி) மற்றும் மொத்த நிறுவனத்தை வாங்குவதற்கு 25 பில்லியன் டாலர் (ரூ.1,85,275 கோடி) தருவதாகவும் அதிபர் டிரம்ப் அரசு விலை பேசியுள்ளது. நிறுவனத்தை விலை பேசியதற்கான ஆதாரங்கள் ஜெர்மன் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தங்கள் நாட்டில் இருக்கும் கியூர்வேக் நிறுவனத்தை அமெரிக்காவிற்கு விட்டுகொடுப்பதற்கு ஜெர்மனி தயாராக இல்லை. எனவே அதுவும் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக விலை பேசி வருகின்றது.

உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை வாங்குவதில் ஜெர்மனி, அமெரிக்கா இடையே கார்ப்பரேட் சண்டை ஏற்பட்டுள்ளது. ஈரானிய மதகுரு பலி: ஈரானின் சட்டமன்ற நிபுணர் குழுவின் உறுப்பினராக இருந்தவர் அயதுல்லா ஹஷேம் பதேய் கோல்பாய்கனி. இவர் உயர்மட்ட மதகுரு மற்றும் சட்டமன்ற நிபுணர் குழுவின் 88 உறுப்பினர்களில் ஒருவர். இந்த குழுவானது உயர்மத குருக்களின் முக்கிய அரசாங்க அமைப்பாகும். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அயதுல்லா உயிரிழந்துள்ளார். கடந்த சனியன்று கோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* அமெரிக்கா கண்டுபிடித்த தடுப்பூசி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. பல்வேறு மாகாணங்களில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக அமெரிக்கா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை மதிப்பீடு செய்து மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் நேற்று தொடங்கியதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு தடுப்பூசியாக இருந்தாலும், அதனை முழுமையாக சரிபார்ப்பதற்கு ஒரு ஆண்டு முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் பங்கேற்கும் முதல் நபருக்கு நேற்று இந்த ஊசி பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. சியாட்டியில் உள்ள சுகாதார மையத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்கும் இந்த மருத்துவ பரிசோதனையில் முதலில் ஆரோக்கியமான 45 தன்னார்வலர்களுக்கு சோதனை தொடங்கி உள்ளது. இந்த சோதனையில் பங்கேற்பவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திருப்பதியில் பக்தர்கள் ஒரே நாளில் 5 முறை தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கூட்டம் குறைந்ததால் ஒரே நாளில் 5 முறைக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் இன்று முதல் நேரடியாக அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் அறிவித்துள்ளார். நேற்று முதல் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், ஆர்ஜித வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

* நேற்று மூடப்பட்ட முக்கிய இடங்கள்:
* டெல்லியில் ஜிம்கள், சினிமா மால்கள், நீச்சல் குளங்கள், இரவு விடுதிகள், ஸ்பா உள்ளிட்டவை வருகிற 31ம் தேதி வரை மூடப்படுகிறது. மத நிகழ்ச்சிகள், சமூதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை.
* மேற்கு வங்கத்தில் வருகிற 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
* அந்தமான் நிகோபர் தீவில் கடற்கரை, நீர் விளையாட்டுக்கள் உள்பட சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளது.
* பீகாரில் 31ம் தேதி வரை நடக்க இருந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டது.

* எச்ஐவிக்கான 2 மருந்து கலவை கொரோனாவை கட்டுப்படுத்தும்?
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இத்தாலியை சேர்ந்த தம்பதியர், 85 வயது முதியவர் மற்றும் 24 வயது வாலிபர் ஆகிய 4 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடங்கியது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் இவர்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு சரியாகி உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலர் ரோகித் குமார் கூறியதாவது: கொரோனா பாதித்த 4 பேரில் மூன்று பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

எச்ஐவி நோய்க்கான 2 மருந்துகளின் கூட்டு கலவை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலமாக கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் காய்ச்சல் போன்று இருந்ததால் முதலில் மலேரியா மற்றும் பறவை காய்ச்சல் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு எச்ஐவிக்கான 2 மருந்துகள் வழங்கப்பட்டது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பில் இருந்தனர். குணமடைந்துள்ள 3 பேரும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* உதவி எண்கள் வெளியீடு
உலகம் முழுவதும் தற்போது ெகாரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு அறை  1800118797 (இலவச எண்) +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 பேக்ஸ் எண்  +91 011 23018158 (பேக்ஸ்) இமெயில்-  covid19@mea.gov.in

* இந்தியாவில் பாதிப்பு 114
ஜம்மு காஷ்மீர், லடாக், ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை தங்களது மாநிலங்களில் தலா ஒருவர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவினால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி இது 110 ஆக மட்டுமே இருந்தது. ஒடிசாவில் இதுவே முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், உலகளவில் இதுவரையில் கொரோனாவால் 6,684 பேர் இறந்துள்ளனர். மேலும், 1,74,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், 77,865 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

* மே.வங்க உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் சவுரவ் தாஸ் கூறுகையில், ``கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 107 நகராட்சி அமைப்புகளுக்கும், கொல்கத்தா நகராட்சிக்கும் நடத்தப்படவிருந்த உள்ளாட்சி தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்துவது குறித்து 15 நாட்களுக்கு பின்னர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இதேபோல், மேற்குவங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Trump ,Corona ,Germany ,company ,takeover ,US , Since July, Corona, First Drug, Germany, Discovery, US President Trump
× RELATED ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு...