×

கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி மீன் கடைகளில் குவிந்தது கூட்டம்: கோழி, வாத்து, காடை விலை சரிவு

சென்னை: கொரோனா வைரஸை தொடர்ந்து, பறவை காய்ச்சல் பறவை வருவதால், கோழி, வாத்து மற்றும் காடை இறைச்சி விற்பனைசரிந்துள்ளது. இதனால் மீன் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினர். இதனால் கோழிக்கறி விற்பனை படிப்படியாக குறையத் தொடங்கியது. கோழி வியாபாரிகள் புகார் செய்ததையடுத்து கோழிக்கறி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோழிகளை கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.என்றாலும், கோழி இறைச்சி விலை தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கோழி பண்ணைகளில் இருந்து முன்பு ஒரு கிலோ கோழி 100க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டது. பின்னர் அது 80 ஆனது. இப்போது கோழி பண்ணைகளில் ஒரு கிலோ உயிருள்ள கோழி 36க்கு விற்கப்படுகிறது.

திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஒரு கிலோ கோழிக்கறி ₹60க்கு விற்கப்படுகிறது. என்றாலும், கோழி இறைச்சியை யாரும் விரும்பி வாங்கவில்லை. பல இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி வாங்கினால் 4 முட்டைகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வளவு சலுகைகளை வழங்கினாலும் கோழி இறைச்சி வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடம் இல்லை. எனவே கோழி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையும் குறைந்துள்ளது. 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டை தற்போது 4.20 ஆகி இருக்கிறது.கோழி பிரியாணி விற்பனையும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பெரிய ஓட்டல்களிலும், சிறிய பிரியாணி கடைகளிலும் கோழி பிரியாணி விற்பனை இல்லை.இதனால் கோழி இறைச்சி வியாபாரிகளும், சிறிய பிரியாணி கடைக்காரர்களும் மிகுந்த அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், வாத்து மற்றும் காடை இறைச்சிகளை வாங்க அசைவ பிரியர்கள் அச்சத்தில் உள்ளதால், அதன் விற்பனையும் படுத்துவிட்டது. இதனால் மக்கள் மீன்களை அதிகளவில் வாங்குகின்றனர். இதனால் மீன்மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதுகிறது. சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, வானகரம், நொச்சிக்குப்பம் மீன்மார்க்கெட் பகுதிகள் நேற்று திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது.

Tags : Floods ,Corona ,crowd , Corona, fish shop, crowd
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி