×

சின்னமலை பணிமனைக்கு புதிய கட்டிடம்: பேரவையில் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் (திமுக) பேசியதாவது:  சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலை போக்குவரத்து பணிமனையில் 114 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இங்கு, போதிய வசதிகள் இல்லாததால் 20 பேருந்துகள் ஆதம்பாக்கம் பணிமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. இங்குள்ள கிளை மேலாளர் அலுவலகம், பணியாளர் ஓய்வறைகள், உணவகம், உணவருந்தும் கூடம், கழிப்பறைகள், தொழிலக பாகாப்பு மற்றும் சுகாதார அலுவலர் அலுவலகம், டூல்ஸ் ரூம் போன்றவை முற்றிலுமாக சிதைந்துள்ளது.  எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் மதிப்பில், ஓய்வறைகள் கட்டும் பணிகள் நடந்து ெகாண்டிருக்கின்றன. எனவே, மீதமுள்ள சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: உறுப்பினர் 10 லட்சம் நிதி கொடுத்திருக்கிறார். இன்னும் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டால், மீதியுள்ள கட்டிடங்களை பணிமனையில் கட்டி முடித்து விடுவோம். தேவையிருக்கும் இடங்களில் கட்டிடங்கள் கட்ட முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பரிசீலிக்கும். மா.சுப்பிரமணியன்: தாண்டர் நகர் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட சிற்றுந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.  அந்த பஸ் சேவையை பயன்படுத்தி தி.நகர், கோயம்பேடு பகுதிகளுக்கு இப்பகுதி மக்கள் சென்று வந்தனர். தற்போது, இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். மேலும், மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து புறப்படும் (த.எ.7எஸ், 45டி, கே18, 88டி) ஆகிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, இந்த பேருந்து சேவைகளையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க அரசு பரிசீலிக்கும்.

Tags : Ma Subramanian , Chinnamalai Workshop, New Building, Council, Ma Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...