மும்பை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் சரத் பவார், மஜீத் மேமன்(தேசியவாத காங்கிரஸ்), மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, அமர் சாப்ளே, சஞ்சய் காகடே(பா.ஜனதா), ஹூசைன் தல்வாய்(காங்கிரஸ்), ராஜ்குமார் தூத்(சிவசேனா) ஆகிய 7 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த 7 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட நேற்று அக்கட்சித் தலைவர் சரத் பவார் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அவருடன் சேர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பவுசியா கான் நேற்று மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், அவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மற்றும் சிவசேனா வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அநேகமாக அவர்களும் இன்று அல்லது நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ சார்பில் ராம்தாஸ் அதாவலே, உதயன்ராஜே போசலே ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. மூன்றாவது வேட்பாளர் இன்னும் முடிவாகவில்லை.
