×

சின்னமனூரில் சாலை பணிக்காக விளைநிலங்கள் அழிப்பு: உணவு உற்பத்தி குறைந்தது

சின்னமனூர்: சின்னமனூரில் புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்கள் அழிக்கப்பட்டதால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை குறுகிய சாலையாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வந்தது. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட உயிர்ப்பலிகளும் நடந்து வந்தன. இதனையடுத்து திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைப்பதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தப்பட்டது. சர்வே செய்து தொடர்ந்து புறவழிச் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ரூ.280.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

வத்தலக்குண்டுவில் 6.9 கிமீ, தேவதானபட்டியில் 3.37 கிமீ, பெரியகுளத்தில் 11.4 கிமீ, தேனியில் 2.55 கிமீ, வீரபாண்டியில் 2.4 கிமீ, சின்னமனூரில் 3.48 கிமீ, உத்தமபாளையத்தில் 4.43 கிமீ, கம்பத்தில் 7.67 கிமீ, கூடலூரில் 4.18 கிமீ உள்பட 133.725 கிமீ தூரம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஏற்கனவே வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, வீரபாண்டி பகுதியில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டாக பணிகள் நடந்து வருகிறது.

சின்னமனூரில் 3.48 கிலோ மீட்டர் தூரத்திற்கான புறவழிச்சாலைக்கு முழுக்க முழுக்க பொன் விளையும் பூமியான வயல்வெளிகளை கையகப்படுத்தியுள்ளனர். வயல்வெளிகளை அழித்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. வருடத்தில் முல்லைபெரியாறு பாசனத்தில் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் நடந்து வரும் இந்த பகுதி வயல்களை புறவழிச்சாலைக்காக அழித்துள்ளதால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. விவசாயிகளும் விவசாயத்தை கைவிட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Chinnamanur ,farmland , Chinnamanur
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி