×

தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நற்செய்தி!

சென்னை: தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நற்செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அவர் அறியப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அறிவித்திருந்தார். மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டவர்களுக்கு நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரிகளும் நெகட்டிவ் என்று வந்துள்ளது. கொரோனா அறிகுறி இருந்த யாருக்கும் வைரஸ் தாக்கவில்லை. எல்லா ரத்த மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டுவிட்டது.

பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எதுவும் நிலுவையில் இல்லை. தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை. தமிழகம் எப்போதும் போல கொரோனா இல்லாமல் இருப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா அறிகுறிகள் இருந்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முன்னதாக, தமிழகத்தில் இருந்து சிலரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் பொறியாளர் இன்னும் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அவரின் உடல் நிலைதொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Vijayabaskar ,Health Minister ,Tamil Nadu ,Covid19 , Tamil Nadu, Blood samples, Coronavirus, Minister of Health, Vijayabaskar
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...