×

கப்பலில் நைல் நதியை சுற்றிபார்க்க சென்ற கோவை தம்பதி உள்பட 17 இந்தியர்கள் எகிப்து நாட்டில் நடுக்கடலில் தவிப்பு: சக பயணிக்கு கொரோனா தொற்றால் பரபரப்பு

கோவை: நைல் நதியை சுற்றிப்பார்க்க சென்ற கோவை தம்பதி உள்பட 17 இந்தியர்கள் உடன் பயணித்த பயணிக்கு கொரோனா தொற்று காரணமாக கப்பலில் இருந்து வெளியேற முடியாமல் எகிப்து நாட்டில் நடுக்கடலில் தவித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் வனிதா. இவரின் கணவர் ரங்கராஜ். இவர்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அதன்படி, கடந்த மாதம் வனிதா, ரங்கராஜ் மற்றும் சென்னை, சேலம் பகுதியை சேர்ந்த 17 பேர் சேலத்தை சேர்ந்த நிறுவனம் மூலம் 10 நாள் சுற்றுலாவாக கடந்த மாதம் 29ம் தேதி எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். அங்கு, ஏ-சாரா என்ற கப்பலில் நைல் நதியை சுற்றி பார்க்க சென்றனர். அந்த கப்பலில் தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 171 பேர் இருந்தனர். அப்போது, அதில் பயணித்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கப்பலில் இருந்த வெளிநாட்டினர் பலருக்கும் கொரோனா தொற்று இருந்துள்ளது. அவர்களை எகிப்து நாட்டினர் உடனடியாக கப்பலில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த கப்பலில் கோவைைய சேர்ந்த வனிதா, அவரின் கணவர் ரங்கராஜ் உள்பட 17 பேர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனிதா ரங்கராஜிடம் தொலைபேசியில் பேசியபோது அவர் கூறியதாவது: நாங்கள் 17 பேர் கடந்த 29ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு எகிப்திற்கு வந்தோம். எகிப்தில் பல இடங்களை சுற்றி பார்த்தோம். பின்னர், ஏ-சாரா கப்பலில் ஏறி கடந்த 4ம் தேதி பயணத்தை மேற்கொண்டோம். 2 நாட்கள் நன்றாகத்தான் சென்றது. 6ம் தேதி திடீரென பதற்றம் ஏற்பட்டது. வெளிநாட்டை சேர்ந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், எங்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தனர். இதில், நெகடிவ் என ரிப்போர்ட் வந்தது. இதனை தொடர்ந்து எங்களை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தோம். ஆனால், அவர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறையின்படி 14 நாட்கள் கண்காணிப்புக்கு பின்புதான் கப்பலில் இருந்து வெளியே செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். எகிப்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். ஆனால், எவ்வித பலனுமில்லை. எங்களை கப்பலில் இருந்து வெளியே கொண்டு வர இந்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Indians ,Goa ,Nile River ,Egypt 17 Indians ,Egypt , Nile River, Coimbatore Couples, Indians, Egypt, Corona
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...