×

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 43 ஆனது தயார் நிலையில் மத்திய அரசு: உலகம் முழுவதும் 1,10,000 பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. நிலைமையை சமாளிக்க மத்திய  அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பலர், கொரோனா  தொற்றுடன் வருவதால், இங்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் 43 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இருந்து ஒரு குடும்பம்  கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு, கடந்த 7ம் தேதி வந்தது. அவர்களின் 3 வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று இருந்தது  பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா  வார்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த குழந்தையின் பெற்றோர்களின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஜம்முவைச் சேர்ந்த 63 வயது பாட்டி ஒருவருக்கும்  கொரோனா தொற்று உள்ளது. இவர்கள் இருவரும் ஜம்முவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் ஈரான்,  தென் ஆப்பிரிக்கா, இத்தாலி சென்று வந்துள்ளனர். ஜம்முவின் சதாவரி மற்றும் சர்வால் பகுதியில் 400 பேர்  கண்காணிப்பில் உள்ளதாக ஜம்மு  காஷ்மீர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  இத்தாலியிலிருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்புடன், ஆக்ரா வந்த சுற்றுலா  பயணிகளுடன் சென்ற உபி.யின் மீரட் நகரைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் 6 ஆக இருந்த  கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 43 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை யாரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறக்கவில்லை என  மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பீதி நிலவுவதால், வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில்  ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை சமாளிக்க மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று  ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

 இதில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேயர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன்பின் பேட்டியளித்த ஹர்ஷ்வர்தன், ‘‘கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த விரிவான விதிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளோம். சிறப்புக் மருத்துவக் குழுக்கள், தனி  வார்டுகள் அமைத்து சோதனைக் கூடங்களையும் பலப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை சமாளிக்க மத்திய அரசு தயார்  நிலையில் உள்ளது’’ என்றார். இதற்கிடையே, 5,400 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி மருத்துவமனையை உருவாக்கும்படி மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரசால் 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் தனி வார்டுகளில் வைத்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை உலகம் முழுவதும் 3,800 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, ஈரானில் தொடர்ந்து இறப்பு  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈரானில் நேற்று மட்டும் 43 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை அங்கு 237 ஆக  அதிகரித்துள்ளது.

பெங்களூரு இன்ஜி.க்கு ெகாரோனா:இதற்கிடையே, பெங்களூருவில் முதன் முதலான சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த  பிப்ரவரி 28ம் தேதி  அமெரிக்கா சென்றிருந்த அவர், மனைவி மற்றும் குழந்தையுடன் நியூயார்க் நகரில் இருந்து துபாய் வழியாக இந்தியா வந்துள்ளார்.  பெங்களூருவுக்கு கடந்த 1ம் தேதி காலை 8,30 மணி அளவில் விமானத்தில் வந்திறங்கி வீட்டிற்கு சென்றார். கடந்த 4ம் தேதி அவரின் உடல் நிலை  பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனை புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு இருக்கிறது என்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போப் தனியாக பிரார்த்தனை
ஆசிய கண்டத்துக்கு வெளியே இத்தாலியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 7,375 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அங்குள்ள வாடிகன் நகரில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சளி  ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி  செய்யப்பட்டது. 83 வயதான போப் பிரான்சிஸ்க்கு நுரையீரலின் ஒரு பகுதி ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. அவருக்கு கொேரானா வைரஸ் தொற்று  ஏற்பட்டால், சிக்கலான பிரச்னைகள் ஏற்படும். அதனால் அவர் மிக கவனமாக இருந்து வருகிறார். வாடிகனில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாடிகனில் உள்ள அருங்காட்சியகம், நூலகம் எல்லாம் மூடப்பட்டு விட்டது.
கொரோனா பாதித்தவர்களுக்காகவும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து கவனிப்பவர்களுக்காகவும், போப் பிரான்சிஸ் வாடிகனில் தான் தங்கியிருக்கும்  இடத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று தனியாக பிரார்த்தனை நடத்தினார். அது டிவி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சீனாவில் பாதிப்பு
குறைந்து வருகிறது
சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இங்கு கொரோனா பாதித்த 22 பேர் மட்டுமே நேற்று முன்தினம் இறந்தனர். இது கடந்த 2  மாதங்களில் மிக குறைவான பலி எண்ணிக்கை. புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவும் கடந்த 2 மாதங்களில் மிக  குறைவான எண்ணிக்கை. இதனால் சீனாவில் கொரோனா பரவிய வுகான் நகரில், 11 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டன. சீனாவில் இதுவரை பலியானவர்களின்  எண்ணிக்கை 3,119. பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 80,735. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19,016. குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 58,600.

இந்தியா உட்பட 13 நாட்டினர்
கத்தார் நுழைய தற்காலிக தடை
உலகம் முழுவதும் கொரோனா பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கத்தார் நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, வங்கதேசம்,  சீனா, எகிப்து, ஈரான், ஈராக், ெலபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய  நாடுகளில் இருந்து பயணிகள் வர கத்தார் அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியா செல்லும் விமானங்களையும் கத்தார் ஏர்வேஸ்  நிறுத்தியுள்ளது. இந்நிறுவனம் தோகாவிலிருந்து இந்தியாவின் 13 நகரங்களுக்கு வாரம் 102 விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்களூருவில் தப்பிய நபருக்கு வலை  
துபாயிலிருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த பயணி ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. அவருக்கு கொரோனா  அறிகுறியும் இருந்ததால், இங்குள்ள வென்லாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என  மருத்துவமனை ஊழியர்களுடன் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்தார்.  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறி அவர்  மருத்துவமனையை விட்டு தப்பியோடிவிட்டார். இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.  மருத்துவமனையில் இருந்த தப்பிய கொரோனா பாதிப்பு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சீன தயாரிப்புகளை தவிர்க்க அறிவுறுத்தல்
இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகுசர்மா விடுத்துள்ள வேண்டுகோளில்,  ‘‘ஹோலி பண்டிகையில் சீன தயாரிப்பு வண்ண பொடிகளை பயன்படுத்த வேண்டாம். இயற்கை வண்ண பொருட்களில் தயாரான  வண்ணங்களை  பயன்படுத்த வேண்டும். ராஜஸ்தானில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல் ஏற்பட்டால்  உடனே டாக்டரை அணுகவும்’’ என கூறியுள்ளார்.

கேரளாவில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை மருந்து, முகக்கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு
கேரளாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க மாநில சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  பத்தனம்திட்டா மாவட்டத்தில் நாளை வரை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான  உத்தரவை மாவட்ட கலெக்டர் நூஹூ வெளியிட்டுள்ளார். இருப்பினும் இன்று தொடங்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி  நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.கேரளாவில் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரும்பாலோனோர் முக கவசம், கையுறைகளை அணிய தொடங்கி உள்ளனர். இதனால் கடைகளில் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே  போல பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் அனைத்து மருந்து கடைகளிலும் காய்ச்சல் மருந்துகள் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.பத்தனம்திட்டா ரானி பகுதியை சேர்ந்த 5 பேர் ெகாரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால்  இப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் இவர்களுடன் பழகியவர்கள் அனைவரும் கவனமாக இருக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ரானி உட்பட சில இடங்களில் சாலைகள் வெறிச்சோடி  காணப்படுகின்றன.

கொரோனாவுக்கு பயந்து சாராயத்துக்கு 7 பேர் பலி
ஈரானில் கொரோனா பீதி அதிகரித்துள்ளது. சாராயம் குடித்தால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா வைரஸ் தாக்காது என யாரோ புரளி  கிளப்பிவிட்டுள்ளனர். இதை நம்பி ஈரானில் பலர் நாட்டு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அதில் உள்ள மெத்தனால் விஷமானதால், ஈரானின்  தென்மேற்கு பகுதியில் உள்ள குசஸ்தானில் 20 பேரும், வடக்கு பகுதியில் உள்ள அல்போர்ஸ் நகரில் 7 பேரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் கட்டுப்பாடு அதிகரிப்பு
இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. இங்குள்ள மிலன் மற்றும் வெனிஸ் நகரில் பாதிப்பு அதிகமாக உள்ளது.  லம்பார்டி உட்பட 14 பகுதிகளில் மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே செல்ல வேண்டும்  என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். கொரோனா பரவுவதை தடுக்க மொத்தம் 1 கோடியே 60 லட்சம் பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து யாராவது தப்பிச் சென்றால், 3 மாதம் சிறை என இத்தாலி உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஈரான் இந்தியர்களை மீட்க விரைந்தது விமானம்
ஈரானில் கொரோனா வேகமாக பரவுகிறது. அங்கு இதுவரை 237 பேர் பலியாயியுள்ளனர். 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அங்கு இந்தியர்கள் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 4 நாட்களுக்கு முன்னாள் ஈரானின் மகென் ஏர்லைன்ஸ் விமானம், 300 இந்தியர்களின் ரத்த  மாதிரிகளை பரிசோதனைக்காக கொண்டு வந்தது. இந்நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் போயிங் சி-17 குளோப்  மாஸ்டர் ஜம்போ சரக்கு விமானம் நேற்று இரவு ஈரான் புறப்பட்டு சென்றது.

Tags : CORONA ,nation ,country ,Central Government , Corona ,across , country, readiness,worldwide
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...