நிலத்தடி நீர் - பொதுமக்கள் எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளம்; இதை ஒரு சிலர் மட்டும் சட்டவிரோதமாக, திருடி பணம் பார்க்கும் தொழிலாக நடத்த அரசு இதுவரை அனுமதித்தது எப்படி? போதாக்குறைக்கு இந்த பொதுவான நிலத்தடி நீரை பெயரளவு சுத்தம் செய்து, சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யும் உற்பத்தியாளர்கள், பொதுமக்களிடம் விலை வைத்து விற்பதையும் யார் அனுமதித்தது? அப்படியே சட்டவிரோதமாக விற்கும் குடிநீர் சுகாதாரமானதாக இருப்பின் இந்த அளவுக்கு குறைந்த விலையில் விற்க முடியுமா?
சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதென்றால், அதற்கு எந்த அளவுக்கு தொழில்நுட்ப சுத்திகரிப்பு முறைகள் தேவை என்பது இந்த உற்பத்தியாளர்களுக்கு தெரிந்தும் அதை மறைத்து ஐஎஸ்ஐ முத்திரையை போலியாக போடுவதா?
இதில் கொடுமை என்னவென்றால் தண்ணீர் வெள்ளை வெளேர் என பளீச்சென இருக்க, அதில் ரசாயன கலவை கலப்பதை எப்படி சுகாதார அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்?
இப்படி தான் கேன் குடிநீர் ஆலைகள், தமிழகம் எங்கும் புற்றீசல் போல பெருகி பொதுமக்களுக்கு வினியோகம் செய்து, சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் வரை பணம் பார்க்கப்படுகிறது. சுத்தமான, சுகாதாரமான, இயற்கை கனிமங்கள் நீங்காமல் கேன் குடிநீர் தருவதென்றால் அதற்கு நான்கு அடுக்கு வரை சுத்திகரிப்பு முறைகள் கையாளப்பட வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை குழாயில் வினியோகம் செய்கிறது அரசு. ஏன், மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் அரசே சுத்தமான குடிநீரை மக்களுக்கு தருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன், கார்ப்பரேஷன் குடிநீர் என்றாலே, பலரும் விரும்பி பயன்படுத்துவர். பல மாவட்டங்களில் இயற்கையான குடிநீருக்கு பஞ்சமில்லை. இப்போது நிலை என்ன? நமக்கே தெரியாமல், கேன் வாட்டர் என்ற பெயரில் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தி வருகிறோம். இமயமலையில் இருந்து நேராக தண்ணீரை கொண்டு வந்து தருவதாக கூட காதில் பூ சுற்றப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் வராத குழாய் குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றம் தலையீட்டிற்கு பின்னாவது அரசு விழித்து கொண்டால் சரி. நான்கு ேகாணங்களில் ஒரு அலசல்: