×

மணலி மண்டலம் மாத்தூரில் குப்பையை தரம் பிரிக்கும் பணி சுணக்கம்: கொசு உற்பத்தியால் மக்கள் அவதி

திருவொற்றியூர்: மணலி மண்டலம் மாத்தூரில் குப்பையை தரம் பிரிக்கும் பணி முறையாக நடைபெறாததால் சாலையோரம் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள 7 வார்டுகளிலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அந்தந்த வார்டுகளில் அமைந்துள்ள குப்பையை தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும், மக்காத குப்பையாக பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மறு சுழற்சி செய்யவும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி 19வது வார்டில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மாத்தூர்,  கொசப்பூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால், இங்கு குப்பையை தரம் பிரிக்கும் பணிகள் முறையாக நடைபெறாததால், வெளியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை இங்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தரம் பிரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை இங்கிருந்து நாட்கணக்கில் அகற்றாமல் குவித்து வைத்துள்ளதால், சாலையோரம் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆடு, மாடு, நாய், பன்றி போன்றவை இந்த குப்பையை கிளறுவதால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி, குப்பையை கிளறுவதில் நாய்கள் மற்றும் மாடுகளுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு சாலைக்கு ஓடி வருவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.  எனவே இங்கு முறையாக குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். அவ்வாறு தரம் பிரிக்க முடியாத பட்சத்தில் இங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மணலி மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mathur , Litter,Classification,Mathur
× RELATED காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கடலில்...