×

இல்லத்தரசிகள் உற்சாகம்; குமரி மார்க்கெட்டுகளில் காய்கறி விலை சரிவு: சின்ன வெங்காயம் கிலோ 40 ஆனது

நாகர்கோவில்: குமரி மார்க்கெட்டுகளில் காய்கறி விலைகள் கடந்த மாதங்களை விட 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும கடந்த  சில மாதங்களுக்கு முன், காய்கறி விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை உச்சத்துக்கு சென்றது. சின்ன வெங்காயத்தின் விலை  கிலோ ரூ.200 வரை சென்றது. பல்லாரி வெங்காயம் விலை ரூ.150 ஆக உயர்ந்தது. வெங்காயத்தின் விலை உயர்வால் உணவு பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. ஓட்டல்களில் வெங்காயம் இல்லாத சாம்பார் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பதுக்கலை தடுக்க வெங்காய குடோன்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் வரத்து குறைந்து, விலை அதிகரித்தது. பின்னர் படிப்படியாக வரத்து அதிகரிக்க வெங்காயத்தின் விலை குறைந்தது.
இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் உச்சத்தில் இருந்த காய்கறி விலைகள் இப்போது 40 சதவீதம் வரை குறைந்துள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை, குமரியில் கிலோ ரூ.40க்கு வந்து விட்டது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30, 26 என விற்பனையாகிறது. முட்டைகோஸ், தக்காளி, கத்தரிக்காய் விலைகளும் குறைந்துள்ளன. முருங்கைக்காய் விலையும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பங்குனி மாதத்துக்கு பின் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று வியாபாரிகள் கூறினர்.

Tags : Housewives , Kumari Market, Vegetable, Price Decline
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை… தீபாவளி...