×

வியாசர்பாடி சாஸ்திரி நகரில் இடம், நிதி ஒதுக்கீடு செய்து 6 ஆண்டாகியும் கிடப்பில் போடப்பட்ட மீன் அங்காடி பணிகள்

* தெருக்களில் விற்பதால் சுகாதார கேடு  
˜ * நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

பெரம்பூர்:  சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 36வது வார்டுக்கு உட்பட்ட வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் 17, 18 மற்றும் 19வது தெரு முழுவதும் கடைகளை அமைத்து, வியாபாரிகள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இங்குள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் மீன் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.   வீடுகளின் அருகிலேயே மீன் கழிவுகள் குவித்து வைக்கப்படுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இங்குள்ள மீன் கடைகளை அகற்றி, தனியாக மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வந்தனர்.அதன்பேரில், கடந்த 2014ம் ஆண்டு, இப்பகுதிக்கான மீன் மார்க்கெட் அமைக்க சாஸ்திரி நகர் 16வது தெருவில் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காக, ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இதுவரை எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தினமும் கண்விழித்து  வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தால் மீன்  கழிவுகள் தான் இருக்கும்.   கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வருகிறது. நாளுக்குநாள் கடைகள் அதிகரித்து வருகின்றன.   இந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் பலர் தங்களது வீட்டை விற்றுவிட்டு, வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். ஆனால் இதற்கு தீர்வு இல்லை. பலகட்ட போராட்டங்களை நடத்திய பிறகு, மாநகராட்சி மீன் அங்காடிக்கு என்று  இடம் ஒதுக்கீடு செய்தும்,  இதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை அதற்கான பணி நடைபெறவில்லை.  தற்போது, குடியிருப்பு பகுதியில் குவித்து வைக்கப்படும் மீன் கழிவுகளால் துற்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரித்து, பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றத்தால் நிம்மதியாக சாப்பிட, தூங்க முடியவில்லை. இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர். மண்டல அதிகாரி என பலருக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,’’ என்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மீன் வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு இங்கு கழிப்பிட வசதி முதல் மீன்களை கழுவுவதற்கான  எந்த வசதியும் இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பக்கத்து தெருவில் உள்ள காலி இடத்தில் மீன் மார்க்கெட் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.  

மழலையர் கல்வி பாதிப்பு
வியாசர்பாடி சாஸ்திரி நகர் 17, 18 மற்றும் 19வது தெருக்களில் மீன் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் 19வது தெருவில் அரசு மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்கள், இந்த மீன் கடைகளால் நாள்தோறும் மூக்கை மூடிக்கொண்டு வகுப்புக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பெற்றோர் கூறுகையில்,  ‘‘பள்ளி அருகே உள்ள மீன் கடைகளால் குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதனால், பல குழந்தைகள் பாதியிலேயே இந்த பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டனர். எனவே, மீன் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.



Tags : city ,fish store ,fish market ,Location , Vyasarpadi, Shastri Nagar, Location, Funding, Fish Store Functions
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...