×

சட்டரீதியான எல்லா வாய்ப்புகளும் முடிந்தது நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் 20ல் தூக்கு

புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலையில் தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு பஸ்சில் பயணம் செய்த 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதால் 2 வாரங்களுக்குப் பின் இறந்தார். குற்றவாளிகளில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால், அவன் 3 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின் விடுவிக்கப்பட்டான். ராம் சிங் என்ற குற்றவாளி, டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்கள் ஒவ்வொருவராக மறுபரிசீலனை மனு, சீராய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என தாக்கல் செய்தனர். இதனால், இவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

பவன் குப்தா என்ற குற்றவாளி ஜனாதிபதிக்கு கடைசியாக அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லி அரசு நேற்று விசாரணை நீதிமன்றத்தை அணுகி, குற்றவாளிகளுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டதால், அவர்களுக்கான தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கும்படி கோரியது. குற்றவாளிகள் தரப்பும் வக்கீலும், சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை என கூறினார்.  இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கில் போடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பதற்காக அவர்களின் வக்கீல் நடத்திய சட்டப் போராட்டமும் முடிவுக்கு வந்து விட்டதால், அவரும் தண்டனை நிறைவேற்ற சம்மதித்து விட்டார். இதனால், இந்த முறை  குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி இருக்கிறது.

குற்றவாளிகள் சாவதை பார்க்க விரும்புகிறேன்: நிர்பயா தாயார்
குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பது பற்றி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அளித்த பேட்டியில், ‘‘குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். வரும் 20ம் தேதிதான் அவர்களுக்கு இறுதி நாளாக இருக்கும் என நம்புகிறோம். அன்று காலைதான் எங்களுக்கு விடியல். இது போன்ற குற்றம் இனி மீண்டும் நடக்காத வகையில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என சாகும்போது நிர்பயா கேட்டுக் கொண்டார். வாய்ப்பு கிடைத்தால், குற்றவாளிகள் சாவதை பார்க்க விரும்புகிறேன்,’’ என்றார்.

உத்தரவை கேலிக்கூத்து ஆக்குகிறார்கள்: மத்திய அரசு
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, டெல்லி அரசு ஆகியவை மேல்முறையீடு செய்தன. இதன் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘நிர்பயா குற்றவாளிகள்,  மரண தண்டனையை தாமதப்படுத்த ஒவ்வொருவராக மேல்முறையீடு செய்து, நீதிமன்ற உத்தரவை கேலிக்கூத்தாக்கினர். இன்று ஒரு வழக்கில் 4 குற்றவாளிகள் உள்ளனர் நாளை 10 அல்லது 20 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படலாம். இவர்கள் எல்லாம் தனித்தனியாக மேல்முறையீடு செய்தால், தண்டனை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படும். தற்போது, குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒரு வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளை ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதா? அல்லது தனித்தனியாக தூக்கிலிடலாமா? என்பதுதான் கேள்வி. இது குறித்து வரும் 23ம் தேதி விசாரிக்கப்படும்,’’ என்றனர். விசாரணை நீதிமன்றம் 20ம் தேதி தூக்கில்போட உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேறுமா என்று மீண்டும்  சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Nirpaya criminals, 4 persons, execution
× RELATED இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு...