×

பவானிசாகர் அணை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி உள்ள பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் கால்நடை மேய்ப்போர் கவனத்துடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந் நிலையில், பவானிசாகர் அணையின் கரைப்பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் யானைகள் மாலை நேரத்தில் குட்டிகளுடன் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அணையில் இருந்து கசியும் நீர் கரையோரத்தில் தேங்கி உள்ளதால் நீரை குடிப்பதற்கும், கரையோரத்தில் புல் மற்றும் செடி கொடிகள் பசுமையாக உள்ளதால் யானைகள் தண்ணீர் குடிப்பதோடு தீவனம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

நேற்று மாலை பவானிசாகர் அணையின் கரையில் உள்ள புங்கார் பழத்தோட்ட பகுதிக்கு வந்த 3 யானைகள் மற்றும் 2 குட்டிகள் என மொத்தம் 5 யானைகள் கரையோரத்தில் உள்ள புற்கள் மற்றும் செடிகொடிகளை உட்கொண்டன. பின்னர், கசிவுநீரை குடித்துவிட்டு மீண்டும் பழத்தோட்டத்தில் உள்ள முட்புதர் காட்டில் முகாமிட்டன. பவானிசாகர் அணையின் கரையோரத்தில் புங்கார், பெரியார் நகர் மற்றும் சுஜில்குட்டை கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். தற்போது, யானைகள் அணையின் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் கால்நடைகளை மேய்ப்போர் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Tags : Bhawanisagar Dam Wild ,Bhawanisagar Dam , Bawanisagar Dam, Wild Elephants, Walking
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்