×

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் அறி க்கை ஒன்றை வெளியிட்டார். அதில் உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நாறும் நிர்வாகமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாற்றியிருக்கிறார் என்று கூறியிருந்தார். எடப்பாடி அரசு கமிஷன், கரப்ஷன், கலெக்சனில் முதலிடம் பிடிக்கும். சட்ட ஒழுங்கு சீரழிவில் முதல் இடம், தொழில் வளர்ச்சியில் கடைசி இடம், வேலை இல்லா திண்டாடத்தில் முதல் இடம், நல்லாட்சியில் பூஜ்ஜியத்திற்கு கீழே செல்லும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோலம் வரைந்த 6 பேரை கைது செய்ததை கண்டித்தும் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த மூன்று விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் மீது, அமைச்சர் வேலுமணி சார்பில் ஒன்று, தமிழக முதல்வர் சார்பில் 2 என மொத்த மூன்று அவதூறு வழக்குகள் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது. இந்த வழக்குகளில் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பட்டது.

இந்தநிலையில் வழக்கு நேற்று சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் வழக்கிற்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஒத்திவைக்க வேண்டும் என்றனர். அப்போது, ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும், வரும் ஏப். 8ம் தேதி அங்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Stalin ,court , Stalin, defamation cases, special court
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...