×

பாஜக முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ராவின் பேச்சு கலவரத்தை தூண்டக்கூடியதே!! : டெல்லி கலவர வழக்கை ஏப்ரலுக்கு ஒத்திவைத்தது தவறு.. மார்ச் 6ல் விசாரியுங்கள் : உச்சநீதிமன்றம்

டெல்லி : பாஜக முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ராவின் பேச்சு கலவரத்தை தூண்டக்கூடியதே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அத்துடன் டெல்லி கலவரம் தொடர்பான வழக்குகளை வெள்ளிக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு பாஜக முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா உட்பட சில அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்களே காரணம் என்று அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு

டெல்லியில் நடந்த கடும் வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியதே இந்த மோதல் மற்றும் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஸ் வர்மா ஆகியோர் பேசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மூன்று தலைவர்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் காட்டம்


இந்நிலையில், காவல்துறையின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடும்படி அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றது. அப்போது பாஜக முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ராவின் பேச்சு கலவரத்தை தூண்டக்கூடியதே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இன்று நடந்த விசாரணை பின்வருமாறு..  

ஹர்ஷ் மாந்தர் தரப்பு வழக்கறிஞர் கோலின் :  பாஜக தலைவர்களின் பேச்சுதான் வன்முறையை தூண்டியது. துப்பாக்கியால் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று இவர்கள்தான் பேசியது. கபில் மிஸ்ரா பேசிய மறுநாளே கலவரம் வெடித்தது. இதற்கான வீடியோ ஆதாரங்களை உங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். டெல்லி ஹைகோர்ட் முதலில் கொடுத்த உத்தரவு எப்ஐஆர் பதிய வேண்டும் என்பதுதான். அதே உத்தரவு உச்ச நீதிமன்றமும் கொடுக்க வேண்டும். இவர்கள் வெளியே சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அதை அனுமதிக்க முடியாது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா :  அப்படி பார்த்தால் ஹர்ஷ் மாந்தர் தவறாக மக்களை தூண்டும்வகையில் பேசிய வீடியோக்களும் இருக்கும். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் அனைத்தையும் விசாரித்தே FIR பதிய வேண்டும்.தற்போது FIR பதிவது உகந்த சூழல் இல்லை.

 தலைமை நீதிபதி போப்டே : இப்போது இதை விவாதிக்க நேரம் இல்லை. முதலில் டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் வரை டெல்லி ஹைகோர்ட் வழக்கை ஒத்திவைத்தது தவறானது. உடனே வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் விசாரிக்க வேண்டும். சூழ்நிலையை காரணம் காட்டி வழக்கை ஒத்திவைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

Tags : Kapil Mishra ,speech ,BJP ,Delhi , Delhi, riots, Supreme Court, Kattam, Harsh Mandir, Kapil Mishra, HC
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...