×

‘நீங்க பண்ண வேண்டியத நாங்க பண்ணிட்டோம்’ பாராக இயங்கிய நிழற்குடை பளிச்: வடமதுரை அருகே இளைஞர்கள் அசத்தல்

வேடசந்தூர்: வடமதுரை அருகே புதுப்பட்டி பிரிவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் திறந்தவெளி பாராக இருந்த பயணிகள் நிழற்குடையை இளைஞர்களே சுத்தம் செய்து அசத்தினர். வடமதுரை அருகே புதுப்பட்டி பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் மதுபிரியர்கள் இந்த நிழற்குடையை பகல், இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த பிப்.25ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. எனினும் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் அந்த நிழற்குடையை சுத்தம் செய்து, பயணிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘புதுப்பட்டி பிரிவில் உள்ள நிழற்குடையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பலமுறை வலியுறுத்தினோம். தினகரனிலும் இதுபற்றி செய்தி வெளியானது. ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் நாங்களே இணைந்து நிழற்குடையை சுத்தம் செய்து உள்ளோம். மக்களுக்கு சேவை செய்வதாக கூறி பணிக்கு வரும் அதிகாரிகள் அவர்களின் பிரச்னைகளை காதில் கூட வாங்குவது இல்லை’ என்றனர்.



Tags : Vadamadurai ,Young People , Naththamadai, Vadamadurai, Youth
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...