×

வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம் கொட்டப்படும்: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

வடமதுரை: வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வடமதுரை நகரின் வடக்கு பகுதியில் உள்ள தென்னம்பட்டி பைபாஸ் என்ற இடத்தில் இருந்து வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. எரியோட்டில் செயல்படும் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

காரணம், வடமதுரை நகரில் இருந்து எரியோடு வழியாக வேடசந்தூர், குஜிலியம்பாறை, கோவிலூர், ஒட்டன்சத்திரம், பழநி, கரூர், தாராபுரம், பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் போன்ற ஊர்களுக்கு இந்த சாலை வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் ஓரங்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகளான மாத்திரை அட்டைகள், காலியான மருந்து பாட்டில்கள், ஊசி சிறிஞ்சுகள் ஆகியவற்றை பெட்டி, பெட்டியாக கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் இருப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ரெட்டியபட்டியை சேர்ந்த டாக்சி டிரைவர் காமராஜ் (45) கூறுகையில், ‘வடமதுரை நகரில் செயல்படும் சில மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மறு சுழற்சி செய்யப்படாத மருத்துவ கழிவு பொருட்களை இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களின் அருகே கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் இருப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே வடமதுரை- ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுப்பதுடன், அதை மீறி கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம் கொட்டப்படும்: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai-Ottenchatram road ,Vadamadurai ,Vadamadurai-Otanchatram road ,Thannampatti Bypass ,Vedasandur ,Vadamadurai- Othanchatram Road ,Dinakaran ,
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது