×

“தஞ்சை டூ மதுரை.. 140 கி.மீ வேகம்.. 1 மணி 50 நிமிடங்கள்..” - சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்.. உயிரை பணையம் வைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுக்கள்

தஞ்சை, தஞ்சையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண்ணின் கல்லீரல், 1 மணி நேரம் 50 நிமிடத்தில் தனது உயிரை  பணையம் வைத்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த கனிமொழி(25). தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.கடந்த 27ம் தேதி காலை தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் சிக்கிய கனிமொழி தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கனிமொழி மூளைச்சாவு அடைந்து விட்டதை டாக்டர்கள்  உறுதி செய்தனர். இதையடுத்து கனிமொழியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, ஒரு சிறுநீரகம் தஞ்சை தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் தஞ்சை ராஜா மிராசுராதார் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்புவது என  முடிவு செய்யப்பட்டது.

உயிரை பணையம் வைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாதனை

இளம்பெண்ணின் உடலில் இருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது நோயாளி ஒருவருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. பின் அவசர கால ஆம்புலன்ஸ் மூலமாக கல்லீரல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டினார். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து மதுரையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனை சுமார் 190 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது உயிரை பணயம் வைத்து 1 மணி நேரம் 50 நிமிடத்தில் அப்பல்லோ மருத்துவமனையை வெற்றிகரமாக அடைந்தார். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினரிடம் அப்பெண்ணின் கல்லீரல் கொடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அவசரகால ஆம்புலன்ஸ் செல்லும்போது அதற்கு முன்பாக காவல்துறை வாகனம் ஒன்று பொதுமக்களை எச்சரித்தபடி சென்றது. வரும் வழியிலும் ஆம்புலன்ஸிற்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை காவல்துறையினர் ஏற்கனவே சீர்படுத்தி வைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்களும் தாமாக முன்வந்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் கல்லீரல் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பேட்டி

இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறும் போது சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்ததாகவும் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கவனத்துடன் வேகமாக வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது போன்று பல உயிர்களை காப்பாற்றி இருப்பதாக கூறிய சுப்ரமணியன், இச்செயல் தனக்கு நிம்மதியை தருவதாக கூறியுள்ளார். ஒரு உயிரை காப்பாற்ற தனது உயிரைப் பயணம் வைத்து வந்த ஓட்டுனர், அதற்கு உதவிய காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Madurai , Ambulance, Driving, Interview, Tanjore, Brainstorm, Adventure, Madurai
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை