×

நெல்லை, தென்காசியில் போலி பத்திரப்பதிவு புகார்: 4 ஆண்டாக பதிவான பத்திரங்களை மறுதணிக்கை செய்ய உத்தரவு: அதிகாரிகள் ஆசியோடு முறைகேடு நடந்தது அம்பலம்

நெல்லை: நெல்லை, தென்காசி பகுதியில் போலி பத்திரப்பதிவுகள் புகார் காரணமாக 4 ஆண்டுகளாக பதிவாகியுள்ள பத்திரங்களை மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பதிவுத்துறையினர் ஆசியுடன் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. பத்திரப்பதிவுத்துறையின் நெல்லை மண்டலம் 7 பதிவு மாவட்டங்களை கொண்டு இயங்கி வருகிறது. தென்காசி, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம் என 7 பதிவு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நெல்லை, தென்காசி வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகப்படியான போலி பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன.

அதன்பேரில் தமிழக பத்திரப்பதிவு துறை தலைவர் ஜோதி நிர்மலா நெல்லை அருகே கங்கைகொண்டான் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டு முறைகேடுகளை கண்டுபிடித்தார். அப்போது அந்த அலுவலக அதிகாரி ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதன் பின்னணியில் முறைகேடுகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நிலங்களுக்கான அசல் சான்று இல்லாமலே சிலர் பத்திரப்பதிவு மேற்கொண்டது தெரிய வந்தது. குறிப்பாக ஒருவர் அசல் ஆவணத்தை தொலைத்து விட்டதாக கூறி காவல்துறையில் புகார் செய்து, ஆள் மாறாட்டம் செய்து பத்திரங்களை பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமின்றி இருவேறு சார் பதிவாளர் எல்கைக்கு உட்பட்ட இடங்களுக்கான பத்திரப்பதிவை ஒரே பத்திரம் மூலம் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவங்கள் குறித்து சென்னையில் உள்ள பத்திரப்பதிவு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி வருவாய் மாவட்டங்களில் போலி பத்திரப் பதிவுகள் பெருகி வருவதும், சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதியற்ற பிளாட்டுகளை எளிதாக பதிவு செய்வது அதிகரித்திருப்பதும் தெரிவிக்கப்பட்டது.

கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து டிரஸ்ட் என்ற பெயரில் இங்கு கிளை விரித்து பல ஏக்கர் நிலங்களை வாரி சுருட்டுவதும், அதற்காக போலி பத்திரப்பதிவுகளை மேற்கொள்வதும்  தெரிய வந்தது. சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு அதிகாரி நேர்மையாக நடந்து கொண்டாலும், அவர் விடுமுறையில் செல்லும்போது வில்லங்க பத்திரங்கள் பதிவு அதிகரித்து வருவது கண்கூடாக கண்டறியப்பட்டது. இதையடுத்து நெல்லை, தென்காசி வருவாய் மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பெருகி வரும் போலி பத்திர பதிவுகள் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக தென்காசி பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகங்களிலும், நெல்லை பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்திலும் கடந்த 4 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்களை மறுஆய்வு செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பதிவுத்துறை ஊழியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் 2.15 ஏக்கர் இடத்தை தனியாருக்கு விற்ற 7 பேர் கைது
பத்திரப்பதிவு ேமாசடிக்கு சிகரம் வைத்தாற்போல் போலீசாரின் அடிமடியில் கை வைத்த சம்பவமும் தென்காசியில் நடந்தேறியது. சுரண்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காவல்துறைக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் மூலம் தனியாருக்கு விற்றனர். சுரண்டை, சங்கரன்கோவில் ரோட்டில் காவல்துறைக்கு சொந்தமாக 2.15 ஏக்கர் காலியிடத்தில் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை மர்மநபர்கள் கிழித்து வீசி விட்டு தனியாருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரண்டை விஏஓ அளித்த புகாரின் பேரில் நிலத்தை மோசடியாக விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி பத்திர பதிவு மாவட்டத்தில் காவல்துறை இடத்திற்கு கூட பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவானது.

Tags : Paddy ,Tenkasi , Fake Deed, Complaint, 4 Years, Registered Securities, Reissue, Order
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்