×

போக்குவரத்து துறை முறைகேடு தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போக்குவரத்து துறை முறைகேடு  தொடர்பான வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து, எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் பலர் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாகவும், பலரிடம் பணம் வாங்கிகொண்டு வேலை கொடுக்காமல் அவர் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து பலர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான மந்தைவெளி வீடு, கரூரில் உள்ள பூர்வீக வீடுகள், அவரது நிறுவனங்கள் என 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மந்தைவெளி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு, கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் கடந்த 20ம் தேதி செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் நீதிபதி ரமேஷ் முன்பு நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதி குற்றச்சாட்டு பதிவிற்காக மார்ச் 3ம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் பரணிகுமார் அஜராகியிருந்தார். குற்றச்சாட்டு பதிவிற்காக, செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகிய மூன்று பேர் ஆஜராகியிருந்தனர். ஆனால் சகாயராஜ் என்பவர் மட்டும் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி நான்கு பேர் இருந்தால் மட்டுமே குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனக்கூறி வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து, 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Senthil Balaji ,Department of Transport , Department of Transport, Complaint, Senthil Balaji, Charge Record, Adjournment
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...