×

கொரோனா வைரஸுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவர்களை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா வைரஸுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவர்களை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மத்திய அரசு - தமிழக அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையில் தமிழக சுகாதாரத்துறை சீரமைப்புத் திட்டத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல்வர் பழனிசாமி முன்னிலையில், திட்டத்திற்கான உலக வங்கியின் காசோலையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இந்தியாவுக்கான உலக வங்கியின் இயக்குனர் ஜுனைது கமால் அகமது வழங்கினார். விழாவில் பங்கேற்ற விஜயபாஸ்கர் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உலக வங்கியின் நிதி பங்களிப்பால் தொடங்கப்பட்டுள்ள சுகாதார சீரமைப்பு திட்ட மூலம், உலக தரத்திலான மருத்துவ சேவையை தமிழக மக்களுக்கு வழங்க முடியும் என தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார மையங்களில் செயல்பாட்டிற்கு ஏற்ப தரச்சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சிகிச்சைகள் விரைவாகவும் சரியான முறையிலும் வழங்கப்படுகிறதா? என்பதையும் இத்திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். கொரோனா வைரஸுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவர்களை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமும் கேட்டறிந்து வருகிறோம்.கொரோனா வைரஸ் புதிதாக பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Government ,Vijayabaskar ,doctors ,Minister Vijayabaskar , Coroner Virus, Alternative Medicine, Minister Vijayabaskar
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை